தாந்தோணிமலை பகவதியம்மன், முத்து மாரியம்மன் கோயில் திருவிழா அக்னி சட்டி, பால் குடம் எடுத்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர், ஏப். 10: கரூர் தாந்தோணிமலை பகவதியம்மன், முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவினை முன்னிட்டு நேற்று அக்னி சட்டி, பால்குடம் மற்றும் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் உள்ள பகவதியம்மன், முத்துமாரியம்மன் கோயில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழா துவங்கிய பிறகு பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கோயில் விழாக்கள் நடைபெறுகிறது.அதன்படி இந்த கோயிலில் மார்ச் 31ம் தேதி அமராவதி ஆற்றில் இருந்து மாரியம்மனுக்கு கம்பம் நடும் விழாவுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 7ம் தேதி பகவதியம்மனுக்கு அமராவதி ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வரும் நிகழ்வினை தொடர்ந்து நேற்று அக்னிசட்டி, அலகு குத்துதல் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கரூர் அமராவதி ஆற்றில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள், பால் குடம், அக்னி சட்டி எடுத்தும், வேண்டிக் கொண்ட பக்தர்கள் அலகு குத்தியும் மேளதாளத்துடன் கோயில் நோக்கி வந்து நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான கம்பம் மற்றும் மற்றும் கரகம் அமராவதி ஆற்றில் விடும் நிகழ்வு நாளை(11ம் தேதி) மாலை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தாந்தோணிமலை போலீசாரும் செய்திருந்தனர்.

Related Stories: