×

சிறுபான்மை, பெரும்பான்மை மக்களை பாதுகாக்கின்ற இயக்கம் காங்கிரஸ் எச்.வசந்தகுமார் பிரசாரம்

திங்கள்சந்தை,ஏப்.10: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் மைலோடு சந்திப்பில் இருந்து நேற்று காலையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சரல்விளை, மேற்கு நெய்யூர், பெத்தேல்புரம், கோணங்காடு, உடையார்விளை, மண்டைக்காடு, மூத்தாருண்ணி, உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்றுவட்டார கிராமங்களிலும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐஜேகே, சமத்துவ மக்கள் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நான் பாராளுமன்ற உறுப்பினர் ஆக நாம் ஒன்றாக இருந்து இந்த வெற்றியை பெறவேண்டும். பாஜ தேர்தல் அறிக்கை நேற்று கொடுத்துள்ளது. 2019ம் ஆண்டில் இருந்து 2097ம் ஆண்டு வரைக்கும் வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். காங்கிரஸ் இயக்கம் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு ₹6 ஆயிரம் கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளோம்.வருடத்திற்கு ₹72 ஆயிரம் வழங்கப்படும். விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர்வு இல்லை என்று அறிவித்துள்ளனர். எப்போதும் மக்களுடன் இருக்கின்ற இயக்கம் காங்கிரஸ்.

மோடி அரசு விவசாயத்தை அழித்து வருகிறது. அந்த அரசின் அமைச்சர் ராதாகிருஷ்ணன் செய்த பணி என்னவென்றால் இங்குள்ள குளங்களை எல்லாம் மண்ணை போட்டு மூடி காங்கிரிட் சாலை அமைத்துள்ளார். குளத்தை மூடி அதன் ேமல் பாலம் போடுவேன் என்கிறார். கடலில் கூட தூண்கள் அமைத்து பாலம் போடுகின்றனர். ஆனால் இங்கு சாதாரண குளத்தில் தூண்களை நிறுவி பாலம் போட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் குளங்களை மண்ணால் மூடுகின்றனர். வயல்களை மண்ணால் மூடுகின்றனர்.
விவசாயிகளை அழிக்கின்ற செயலை பா.ஜ அரசு செய்துள்ளது. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வாங்கி கொடுப்பேன் என்றார். செய்தாரா? ஒரு நபருக்கும் கொடுக்கவில்லை. மோடி வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றார், செய்தாரா?. ரூ.15 லட்சம் போடுவேன் என்றாரே, அக்கவுண்ட்டில் பணம் போடவில்லை. சிறுபான்மை, பெரும்பான்மை என அத்தனை மக்களையும் பாதுகாக்கின்ற இயக்கம் காங்கிரஸ். எனவே காங்கிரஸ் வேட்பாளராகிய எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ், திமுக ஒன்றிய செயலாளர் எப்.எம்.ராஜரத்தினம், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மகேஷ்லாசர், வட்டார தலைவர்கள் ஜெரால்டு கென்னடி, கிளாட்சன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, காங்கிரஸ் பொருளாளர் யூசுப்கான், சந்துரு, நெய்யூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பால்சேகர், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிஎஸ்பி சந்திரா, மாவட்ட பிரதிநிதி ரெஜிலின் ராஜகுமார், நெய்யூர் பேரூர் முன்னாள் திமுக செயலாளர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாலையில் மணவாளக்குறிச்சி, பேயோடு, உரப்பனவிளை, அம்மாண்டிவிளை, கொல்லமாவடி, நெட்டாங்கோடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் குருந்தன்கோடு அம்மன் கோயில் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

Tags : minority ,Congress H. Vasantha Kumar ,
× RELATED கனிமொழி பற்றி அவதூறு: பாஜ பிரமுகர் கைது