×

ஜி.எஸ்.டி வரியால் தொழில்கள் பாதிப்பு

பொங்கலூர், ஏப்.9:கோவை மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ஆர்.,நடராஜன் போட்டியிடுகிறார். அவரது வெற்றி குறித்தும் தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று அக்கட்சியின் பல்லடம் அலுவலகத்தில் நடந்தது. இதில்  அக்கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,வரிவிதிப்பு காரணமாக ஏராளமான சிறு, குறு தொழில்கள்  பாதிப்படைந்துள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களைப் பொருத்தவரை விசைத்தறித் தொழில் அதிகமாக உள்ளது. அரசின் வரிவிதிப்பால் இரண்டு லட்சம் விசைத்தறிகளில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன. தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்ற மசோதாவை சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியினரும் ஒருமித்த குரலில் தீர்மானம் நிறைவேற்றியும் அதனை தமிழக அரசு குடியரசுத் தலைவர் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடி வருகிறோம். எங்களது தேர்தல் அறிக்கையில் வரிகுறைப்பு, நீட்தேர்வுக்கு விதிவிலக்கு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை தெளிவாக சொல்லியிருக்கிறோம். இந்தியாவில் அரசியல் என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தேர்தல் கருத்துக்கணிப்பு என்பது அறிவிப்பூர்வமானதல்ல. இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு குணசேகரன்,மாநிலக்குழு காமராஜ்,மாவட்டக்குழு முத்துச்சாமி,சத்தியமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : Businesses ,GST ,
× RELATED கிளாம்பாக்கம் புதிய காவல்...