×

சுற்றுலா பயணிகளை கவரும் ‘பாட்டில்பிரஷ்’ பூக்கள்

மஞ்சூர், ஏப்.9: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் பூத்து குலுங்கும் ‘பாட்டில்பிரஷ்’ பூக்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளது. இதை முன்னிட்டு தினசிரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோரும் ஊட்டி, குன்னுார் பகுதிகளை பார்வையிட்டபின் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக மஞ்சூர் சுற்றுபுற பகுதுகளில் பல வகையிலான வண்ண மலர்கள் பூத்து குலுங்குகிறது. ஏற்கனவே சாலையோரங்கள் மற்றும் சாலையோரத்தை ஒட்டிய  தோட்டங்கள், வனப் பகுதிகளில் ரெட்லீப், ஜெகரண்டா, கொன்றை, மேபிளவர் உள்ளிட்ட மலர்கள் பெருமளவு பூத்துள்ளது.  இவற்றுடன் தற்போது ‘பாட்டில்பிரஷ்’ பூக்களும் அதிகளவில் பூத்துள்ளது. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கும் இந்த பூக்கள் பார்ப்பதற்கு கண்ணாடி பாட்டில்களை கழுவ பயன் படுத்தும் நைலான் பிரஷ்களை போல் காணப்படுவதால் ‘பாட்டில்பிரஷ்’ பூக்கள் என அழைக்கப்படுகிறது. மஞ்சூர் ஊட்டி சாலை, தாய்சோலை சாலையோரங்களில் இந்த பாட்டில் பிரஷ் பூக்கள் ஏராளமாக பூத்துள்ளதால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இப்பூக்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

Tags : Bottle bush ,
× RELATED குன்னூரில் பூத்து குலுங்கும் சேவல்...