×

கோவை ஆத்துப்பாலத்தில் சிக்கிய கன்டெய்னர் லாரி சிறைபிடிப்பு

கோவை, ஏப்.9:  கோவையில் இருந்து கேரளா நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். லாரியில் பணம் இருப்பதாக கூறி பொதுமக்கள் லாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இருந்து கேரளாவை நோக்கி நேற்று இரவு கன்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றது. லாரி ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகே சென்ற போது போலீசார் அதை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர் நிறுத்தாமல் சென்றார்.  போலீசார் லாரியை துரத்தி சென்று தடுத்து நிறுத்தினர்.லாரி டிரைவரிடம் ஆவணங்களை ஆய்வு செய்ததில் டீ தூள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கன்டெய்னர் லாரியை அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். லாரியில் பணம் இருக்கிறது. அதனை திறந்து காண்பித்தால் தான் லாரியை விடுவிப்போம் என கூறினர். இதனை தொடர்ந்து போலீசார், தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில்  போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர்  100 க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர்.  அங்கு கூடியிருந்த இளைஞர்களில் சிலர் கன்டெய்னர் லாரியின் பூட்டை கல்லை கொண்ட உடைக்க முற்பட்டனர். இதனையடுத்து அதிரடியில் இறங்கிய போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நள்ளிரவு 1 மணியளவில் கன்டெய்னர் லாரி  போலீஸ் பாதுகாப்புடன் கோவை கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக கோவை - பொள்ளாச்சி சாலையில் 2 மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. கோவை  கலெக்டர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்ட லாரி, தேர்தல் அதிகாரிகள், அரசியல்  கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது லாரியில் டீ த்தூள்  பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. லாரி டிரைவர் கருரை சேர்ந்த பிரகாஷ்  என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோவை வெள்ளக்கிணறு பகுதியில்  உள்ள குடோனில் இருந்து டீ த்தூள் பண்டல்கள் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள  துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.

Tags : Laurie ,Coimbatore ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...