×

ஜிஎஸ்டி., வரிவிதிப்பதால் ஜவுளி தொழில் பாதிப்பு திமுக கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தி பிரசாரம்


ஈரோடு, ஏப். 9:  ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு நேற்று ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.  இந்த பிரசார நிகழ்ச்சியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு திமுக கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தி பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதன் மூலமாக பெண்கள் பாதிக்கப்பட்டனர்.  ஈரோடு மாவட்டம் ஜவுளி தொழிலுக்கு புகழ் பெற்ற மாவட்டமாகும். மத்திய அரசு ஜவுளிக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பதால் ஜவுளி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி வியாபாரிகளும், நெசவாளர்களும் பாதிக்கப்பட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

 மேலும் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தன்னிச்சையாக அறிவித்தார். ஒரே இரவில் இவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் காத்திருந்த பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். மோடி தலைமையிலான மத்திய அரசில் இதுவரை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. இதை தட்டி கேட்க வேண்டிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு எதையும் கேட்காமல் இருக்கிறார்கள். மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் பா.ஜ., கட்சியோடு  அதிமுக.,வினர் கூட்டணி வைத்துள்ளனர்.  இந்த தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் நான் உள்ளூரை சேர்ந்த வேட்பாளர். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். உங்களின் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன். இவ்வாறு பேசினார்.

 இந்த பிரசார நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் முத்துசாமி, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரவி மற்றும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எலவமலை ஊராட்சி பெருமாபாளையத்தில் தொடங்கிய இந்த பிரசாரம் பேரோடு, சித்தோடு, நசியனூர், பிச்சாண்டாம்பாளையம், கதிரம்பட்டி, கூரபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடந்தது.

Tags : Ganjamurthy ,DMK Coalition for Damaging Textile Industry ,
× RELATED ஜிஎஸ்டி., வரிவிதிப்பதால் ஜவுளி தொழில்...