×

போச்சம்பள்ளி அருகே ரேஷன் கடை திறப்பதில் தாமதம் ; பெண்கள் தர்ணா போராட்டம்

போச்சம்பள்ளி, ஏப்.9:  போச்சம்பள்ளி அருகே சரியான நேரத்திற்கு ரேஷன் கடையை திறக்காததால் கொளுத்தும் வெயிலில் காத்திருந்த பெண்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட காட்டுவென்றவள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 480 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நேற்று அரிசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிகாலை முதலே பெண்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால், காலை வெகு நேரமாகியும் ரேஷன்கடை பணியாளர் வரவில்லை. இதனால், வெயிலில் காத்திருந்த பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, சாவகாசமாக வந்து சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளரிடம், தாமதத்திற்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர். அப்போது, “என் இஷ்டப்படிதான் வருவேன். உங்கள் இஷ்டத்திற்கு என்னால் வரமுடியாது” என கூறியுள்ளார். அதனைக்கேட்டு ஆத்திரமடைந்த பெண்கள், ரேஷன் கடை விற்பனையாளரை முற்றுகையிட்டனர். பின்னர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது:காட்டுவென்றவள்ளி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் செல்வி என்பவர் சரியான நேரத்திற்கு வேலைக்கு வருவதில்லை. தாமதமாக திறந்தாலும் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்குவதில்லை. இதுகுறித்து கேட்டால், சரியானபடி பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என கூறிவிட்டு, கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார். ஒரு நாள் கடைக்கு வராவிட்டாலும் எங்களுக்கான பொருட்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், காலை முதலே காத்திருந்தாலும் உரிய நேரத்திற்கு வந்து கடையை திறப்பது கிடையாது. அப்படியே திறந்தாலும் கேட்ட பொருட்கள் கிடைப்பதில்லை. ஆனால், அனைத்து பொருட்களும் வாங்கி விட்டதாக செல்போன்களுக்கு குறுந்தகவல் வந்து விடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக உரிய விளக்கம் கேட்பதற்காக போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலரை போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் அழைப்பினை துண்டித்து பேச மறுத்து விட்டார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Tags : ration shop ,Pochampalli ,Women's ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்களுக்கு போதுமான...