×

பறக்கும் படையால் குறிவைக்கப்படும் எதிர்க்கட்சிகள்

சிவகங்கை, ஏப்.9:  தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டறிவதாக கூறும் பறக்கும் படையினர், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச்.10 வெளியிடப்பட்டு அன்றே தேர்தல் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டன. பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனை மற்றும் கட்சியினர் நடத்தக் கூடிய கூட்டங்களில் சோதனை செய்வது முக்கியமானதாக உள்ளது. இதுபோன்ற சோதனைகள் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்கள், அவர்களுடைய வாகனங்கள், வீடுகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளான பாஜக, அதிமுக விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் பறக்கும்படை அதிகாரிகள் உள்ளனர். தேர்தல் ஆலோசனை கூட்டம், வீடு வீடாக வாக்கு கேட்க செல்வது என எதிர்க்கட்சிகள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உள்ளே புகுந்து சோதனை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.

அமமுக பிரமுகர் வீட்டில் வருமானத்துறை சோதனையும் நடந்தது. ஆனால் அதிமுக, பஜக நடத்தும் நிகழ்ச்சிகளை கண்டும் காணாதது போல் இருக்கின்றனர். சிவகங்கை, காரைக்குடியில் எம்.ஜி.ஆர் சிலைகளை அதிமுகவினர் விருப்பத்திற்கு திறந்தது, லோடு வேன்களில் ஆள் ஏற்றுவது, பணம் வழங்கல் என அதிமுக, பிஜேபியின் விதிமீறல்கள் எதையும் தேர்தல் ஆணையம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் புகுந்து சோதனை செய்யும் அலுவலர்கள், ஆளும் கட்சியினர் நடத்தும் கூட்டங்களுக்குள் செல்ல அச்சமடைகின்றனர். அதிமுக, பாஜகவினர் கட்சியினருக்கு பணம் சப்ளை செய்வது எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடக்கிறது. மூடப்பட்ட சிலைகளை அவர்கள் தேவைக்கு ஏற்றவாறு திறப்பதை பார்த்துக்கொண்டு தேர்தல் அலுவலர்கள் நிற்கின்றனர். தேர்தல் அலுவலர்களின் இந்த நடவடிக்கை, ஆளும் அரசிற்கு சாதகமாக இருக்கிறது. இவர்கள் எப்படி தேர்தலை நேர்மையாக நடத்த முடியும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட நேர்மையாக செயல்பட முடியாத அலுவலர்கள் தேர்தல் பணியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளலாம். ஆளும் கட்சிக்கு சாதகமாக நடப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.

Tags : Opponents ,
× RELATED உள்ளாட்சி தேர்தல் அதிமுக ஆலோசனை...