×

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 24 லட்சம் பேருக்கு வேலை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

சிங்கம்புணரி, ஏப். 9:  சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்தார். இதில் அவர் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சி இந்தி பேசாத மாநிலங்களில் வளர முடியவில்லை. எட்டு மாநிலங்களில் 232 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி நடத்துகிறது.
 இதனால் மற்ற மாநிலங்களில் வேரை ஊன்ற முயற்சிக்கின்றன. தமிழகத்தில் கோமாளித்தனமான ஆட்சி நடைபெறுகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் மோடிக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். பல்லக்கில் உள்ளவர் பொல்லாதவர் என்றால் பல்லக்கு தூக்குபவர்களும் பொல்லாதவர்கள் தான். தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் நடத்த தடங்கல் செய்தனர்.

இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தோல்வி பயத்தால் நடத்தவில்லை. தமிழ்நாடு என்றவுடன் நினைவுக்கு வருவது தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நெடுவாசல் எரியுவாயு தோண்டி நெல் வயல்களை பாலாக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தலைமை செயலர் அலுவலகத்தில் சோதனை நினைவுக்கு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 4.7 கோடி பேர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் ஜிஎஸ்டி வரி காரணமாக 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் வேலை இழந்ததாக தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மத்திய அரசில் 4 லட்சம் காலி பணியிடமும், மாநில அரசுகளில் 20 லட்சம் காலி பணியிடமும் என 24 லட்சம் பணியிடங்கள் ஒன்பது மாதத்தில் வழங்கப்படும். 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். விவசாய கடன் தள்ளுபடி, 150 நாள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள மைனாரிட்டி அரசு அகற்றப்பட்டு ஸ்டாலின் முதல்வராக வருவார் என்றார். இதை தொடர்ந்து எஸ்.வி.மங்கலத்திலும் பிரச்சாரம் செய்தார். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்ஏ அருணகிரி, திமுக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தை கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : P.Chidambaram ,Congress ,
× RELATED இந்தியாவை சர்வாதிகார பாதைக்கு...