×

விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா கொண்டாட்டம் விடிய, விடிய அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

விருதுநகர், ஏப். 9: விருதுநகர் ஆதிபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கடந்த இரு தினங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் விடிய, விடிய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 31.ல் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து கோயிலில் தினசரி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் கோயில் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

நேற்று முன்தினம் மாலை முதல் மாவிளக்கு எடுத்தல், உருண்டு கொடுத்தல், உருவபொம்மைகள் வாங்கி வைத்தல், ஆயிரம் கண்பானை, கரும்பு தொட்டில் எடுத்தல், தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் களை பக்தர்கள் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்றும் தீச்சட்டி, குதில்சட்டி, 101, 51, மற்றும் 21 தீச்சட்டி, ரதம் இழுத்தல், பறவை காவடி, வேல் குத்துதல் என பல்வேறு நேர்த்திகடன்களை, இன்று அதிகாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் செலுத்தினர். சுற்றுப்பகுதி கிராம மக்கள் நேற்று இரவு முதல் விடிய, விடிய தீச்சட்டி எடுத்து கூட்டம், கூட்டமாக வந்ததால் நகரின் முக்கிய வீதிகள் மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க எஸ்பி ராஜராஜன் தலைமையில் 495 போலீசாரும், 100 சாரணர் மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று மாலை 5.06 மணிக்கு அம்மன் கோவில் திடலிருந்து நகரின் ரத வீதியில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

Tags : celebration ,Parasakthi Mariamman Mar Pongal ,Virudhunagar ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...