×

மாவட்டத்தில் இன்று முதல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம் கலெக்டர் சிவஞானம் அறிவிப்பு

விருதுநகர், ஏப். 9: கலெக்டர் சிவஞானம் நிருபர்களிடம் கூறியதாவது:விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2ம் கட்ட பயிற்சி வகுப்பில் 3 சதவீத அலுவலர்கள் ஆப்சென்ட் ஆயினர். தேர்தல் அலுவலர்களுக்கு வேறு தொகுதியில் வாக்குகள் இருந்தால் தபால் ஒட்டும், பணியாற்றும் அதே தொகுதியில் இருந்தால் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியாற்ற உள்ள 9,809 பேரில், தபால் ஓட்டு கேட்ட 6,032 பேரில் 4,007 பேருக்கு தபால் ஓட்டு வழங்கப்பட்டுள்ளது. பாக்கியுள்ளவர்களுக்கு 17ம் தேதி பயிற்சி வகுப்பில் வழங்கப்படும். தபால் ஓட்டு பெற்ற 4,007 பேரில் 1,320 பேர் அந்தந்த பயிற்சி மையங்களில் வாக்குகளை பதிவு செய்தனர். 3ம் பயிற்சி 17ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 4 நாட்களுக்கு முன் 14ம் தேதி வரை தபால் ஓட்டு வாங்கிக் கொள்ளலாம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் காலை 8 மணிக்கு முன்பு வரை வாக்களிக்கலாம்.

தேர்தல் அலுவலகத்தில் கடந்த முறை வரை தபால் ஓட்டுகள் போடுவதற்கான பெட்டி வைக்கப்பட்டது. இந்தமுறை பெட்டி வைக்கப்படாது என்பதால் பயிற்சி மையத்தில் தபால் ஓட்டு போடாதவர்கள், தங்களது ஓட்டுகளை தபாலில் மட்டுமே அனுப்ப முடியும். பெங்களுர் பெல் நிறுவனத்தில் இருந்து வந்துள்ள பொறியாளர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு சீட்டுகளை பொறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,
வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி: வாக்காளர்களுக்கு இன்று (ஏப்.9) முதல் 12ம் தேதி வரை வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா இரு பெண் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். மாவட்டத்தில் உள்ள 8,500 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்கும் மையங்களில் 350 மையங்களில் வீல்சேர்களும், சேவையாளர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர்.
மாதிரி வாக்குச்சாவடிகள்:மக்கள் அதிகம் வந்து செல்லும், கூடும் இடங்களில் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 1881 வாக்குச்சாவடியிலும் மாதிரி தேர்தல் நடத்தும் முறை பற்றிய போஸ்டர் ஒட்டப்படும். மாவட்டத்தில் உள்ள 203 பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இதுவரை 74 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் 67 இடங்களில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 8.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் செலவில் காங்.,முதலிடம்:வேட்பாளர்கள் ஏப்.2ம் தேதி வரை செலவான கணக்குகளை ஏப்.5ம் தேதி முதல் கட்டமாக சமர்ப்பித்தனர். அதில், காங் வேட்பாளர் ரூ.11.05 லட்சம், தேமுதிக வேட்பாளர் ரூ.9.96 லட்சம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரூ.3.68 லட்சம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரூ.2.01 லட்சம், அமமுக வேட்பாளர் ரூ.5.05 லட்சம் கணக்கு காட்டி உள்ளனர். சுயேட்சைகள் ஆயிரங்களில் செலவு கணக்குகளை சமர்ப்பித்துள்ளனர். 7 பேர் கணக்கு சமர்ப்பிக்கவில்லை, 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்படுகிறது. தேர்தல் முடிந்த 30 நாட்களில் கணக்கு சமர்ப்பிக்கவில்லை அல்லது தவறுதலாக கணக்கு சமர்ப்பிக்கும் வேட்பாளர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. தேர்தல் பாதுகாப்பிற்காக 4 கம்பெனி துணை ராணுவ படையினர் வர இருப்பதாக தெரிவித்தார்.

Tags : Sivagnanam ,launch ,house ,district ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!