×

நான்குவழிச்சாலையில் உள்ளூரை புறக்கணிக்கும் வெளியூர் பஸ்கள்

காரியாபட்டி, ஏப். 9:விருதுநகர் மாவட்டத்தில் மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் காரியாபட்டி உள்ளிட்ட பல ஊர்களும், அருப்புக்கோட்டை-நெல்லை நான்குவழிச்சாலையில் விருதுநகர், சாத்தூர் மற்றும் கொல்லம் நெடுஞ்சாலையில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய முக்கிய ஊர்கள் உள்ளன. இந்த சாலைகள் வழியாக அரசு விரைவு பஸ்கள் தினசரி சென்று வருகின்றன.ஆனால், மதுரையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் சென்று வரும் விரைவு பஸ்கள் காரியாபட்டி, அருப்புக்கோட்டை நகருக்குள் வந்து செல்வதில்லை. இதனால், நான்குவழிச்சாலையை ஒட்டியுள்ள ஊர்களுக்கு வரும் வெளியூர் பயணிகளும், உள்ளூர் மக்களும் அவதிப்படுகின்றனர். நெல்லை செல்லும் பஸ்கள் விருதுநகர் ஊருக்குள் செல்வதில்லை. பழைய, புதிய பஸ்நிலையங்களை புறக்கணிக்கின்றன. திருவில்லிபுத்தூர் பஸ்நிலையத்திற்குள் செல்லாமல் சில பஸ்கள் சர்ச் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

காரியாபட்டி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பொதுமக்கள், திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்ல மதுரைக்கு சென்று, அங்கிருந்து திருசெந்தூர் செல்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி நான்குவழிச்சாலையை ஒட்டியுள்ள முக்கிய ஊர்களுக்குள் அரசு விரைவு பஸ்கள் சென்று வருவதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சமூக ஆர்வலர் அழகர்சாமி கூறுகையில், ‘நான்குவழிச்சாலை வழியாக செல்லும் விரைவு பஸ்கள், முக்கிய ஊர்களுக்குள் வந்து செல்ல, பலமுறை மண்டல போக்குவரத்து மேலாளரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வெளியூர் பஸ்கள் பெரும்பாலும் பைபாஸ் ரைடர், பாய்ண்ட் டூ பாயிண்ட், எக்ஸ்பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி செல்கின்றனர். கட்டணமும் அதிகமாக வசூலிக்கின்றனர். பஸ்களை காலியாக ஓட்டுகிறார்களே தவிர, முக்கிய ஊர்களுக்குள் வந்து செல்வதில்லை. இதனால், போக்குவரத்து கழகத்திற்கும் இழப்பு ஏற்படுகிறது.

 காரியாபட்டி வட்டாரத்தில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வாரந்தோறும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இவர்கள் வெளியூர் சென்று, அங்கிருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். சம்மந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள், நான்குவழிச்சாலை வழியாக செல்லும் விரைவு பஸ்கள் முக்கிய ஊர்களுக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : locals ,
× RELATED காஷ்மீரில் 3 உள்ளூர்வாசிகள் மர்ம சாவு குறித்து ராணுவம் விசாரணை