×

ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினத்தில் தீவிர பிரசாரம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படும்

ஆறுமுகநேரி, ஏப். 9: ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்தார்.
  தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை, நேற்று காலை 7 மணிக்கு வடக்கு ஆத்தூரில் துவங்கி சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல், தெற்கு ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து ஆறுமுகநேரி மெயின் பஜாரில் பேசுகையில், ‘‘இப்பகுதி சுதந்திர போராட்ட வீரர்கள் பலரை தன்னகத்தே கொண்ட தியாகபூமியாகும். தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். தாமிரபரணி கூட்டு குடிநீர்த் திட்டம் விரைவாக நிறைவேற்றப்படும். இதே போல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் விரைவில் நிறைவேற்றித் தருவேன். கடற்கரை மக்களும் என் மக்கள்தான். அதனால் தாமரையை நம்பிக்கையுடன் மலர வைப்பார்கள். எனது கருமை நிறம் குறித்து எதிர்க்கட்சியினர்  கேலி செய்கின்றனர். நான் உங்கள் வீட்டு பெண். கருப்பு தான் நமது நிறம். மேலும் கருப்பட்டி தான் ஒரிஜினல். கருப்பட்டி காபிதான் நம்ம காப்பி. தூத்துக்குடி தொகுதியை தூய்மைப்படுத்த, புல்லட் ரயில் இயக்க, தொகுதியில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன். எனவே, நீங்கள் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.

 பின்னர் காயல்பட்டினம் சென்ற தமிழிசை அங்குள்ள பஸ் நிலையத்தில் வாக்குசேகரித்து பேசுகையில், ‘‘உங்களுக்கு நல்லது செய்வதற்காகதான் உங்கள் சகோதரியாகிய நான் இங்கு போட்டியிடுகிறேன். சிறுநீரக கோளாறால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியைச் சேர்ந்த தம்பி நவராஜனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூட செய்து தரப்படுகிறது. இதே போல் அனைத்து தரப்பினருக்கும் தேவையான உதவிகளை உறுதியாக செய்துதருவேன்’’ என்றார். பிரசாரத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ, முன்னாள் யூனியன் சேர்மன் விஜயகுமார், ஒன்றியச் செயலாளர் ராஜ் நாராயணன், ஆறுமுகநேரி நகரச் செயலாளர் அரசகுரு, கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், ஜெகதீசன், பாஜ ஓபிசி மாவட்ட பொதுச்செயலாளர் தங்கபாண்டியன், ஆறுமுகநேரி நகரத் தலைவர் மகேந்திரன், வர்த்தக அணி மாநில செயலாளர் ராஜகண்ணன், தமாகா மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் தங்கமணி, திருச்செந்தூர் வட்டாரத் தலைவர் சுந்தரலிங்கம், நகரத் தலைவர் முருகன்,  பாமக தெற்கு மாவட்டச் செயலாளர் பரமகுரு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Athuroor ,campaign ,Arumuganeri ,Kayalpattinam ,
× RELATED சாகுபுரம் அருகே ஆபத்தான வளைவு பாலத்தில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?