×

மலேசியாவில் இருந்து ₹18 லட்சம் தங்கம் கடத்தியவர் கைது

சென்னை, ஏப். 9: மலேசியாவில் இருந்து சென்னைக்கு ₹18 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில் நடந்த சோதனைகளை கடந்து சாமர்த்தியமாக தப்பிய அவர், மெட்ரோ ரயில் நிலையத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நேற்று காலை 11.30 மணியளவில் வந்த ஒரு வாலிபர், டி.எம்.ஸ். செல்வதற்கு டிக்கெட் எடுத்தார். பின்னர், நடைமேடைக்கு சென்றபோது, அவர் வைத்திருந்த கைப்பையை மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது, அதில் தங்கம் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதையடுத்து ரயில் நிலைய ஊழியர்கள், பையை பறிமுதல் செய்து, அந்த பயணியை தடுத்து நிறுத்தினர். பின்னர், இதுகுறித்து மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த போலீசார், அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில், 510 கிராம் எடையுள்ள 5 தங்க கட்டிகள் இருந்தன. அதன்மதிப்பு ₹18 லட்சம். விசாரணையில், அந்த வாலிபர் திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆஸ்பக் ஹாசன் (22) என்பதும், இவர், மலேசியாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்ற ஆஸ்பக் ஹாசன் அங்கிருந்து உள்ளாடைக்குள் மறைத்து 510 கிராம் தங்கத்தை விமானம் மூலம் கடத்தி வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ேசாதனை அதிகம் என்பதால், திருச்சி விமான நிலையம் சென்றுள்ளார்.அங்கு, அதிகாரிகளிடம் சிக்காமல் சாமர்த்தியாமாக தப்பி, வெளியே வந்துள்ளார். பின்னர், திருச்சியில் இருந்து ஆம்னி பஸ்சில் பெருங்களத்தூர் வந்து, அங்கிருந்து மாநகர பஸ்சில் திருவல்லிக்கேணி புறப்பட்டுள்ளார். திடீரென அவருக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆசை வந்ததால், மீனம்பாக்கத்தில் இறங்கி, மெட்ரோ ரயிலில் பயணிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சோதனை கருவியில் சிக்கினார்.இதையடுத்து, போலீசார் இதுபற்றி பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தாசில்தார் சம்பவ இடத்துக்கு வந்து, தங்கத்தை பறிமுதல் செய்து ஆலந்தூர் தாலுகா கருவூலத்தில் ஒப்படைத்தனர். ஆஸ்பக் ஹாசனை கைது செய்து யாருக்காக தங்கம் கடத்தி வந்தார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : smuggler ,Malaysia ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...