×

7,260 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர் சிறப்பு பார்வையாளர் தகவல்

திருவாரூர், ஏப். 9:நாகை  மக்களவை மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி இடைத்தேர்தல் வரும் 18ந் தேதி நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு என செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்தல் சிறப்பு பார்வையாளர் கார்த்திக் தலைமையிலும்,  மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் டி.ஆர்.ஒ  பொன்னம்மாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாமகேஸ்வரி, மகளிர் திட்ட அலுவலர் லேகா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் தேர்தல் தாசில்தார் சொக்கநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் சிறப்பு பார்வையாளர் கார்த்திக் பேசுகையில், வரும் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம்  வாக்களிக்க ஏதுவாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி மாவட்டத்தில் திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் 1984  வாக்காளர்களும், மன்னார்குடியில் 1,027 வாக்காளர்களும்,  திருத்துறைபூண்டியில் 1452 வாக்காளர்களும், நன்னிலத்தில் 2797 வாக்காளர்களும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 4 எம்எல்ஏ தொகுதிகளிலும் 7 ஆயிரத்து 260 பேர்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தள வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டமானது  நடைபெறுகிறது. எனவே வாக்குபதிவு நாளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வரும்போது அவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் நேரடியாக வாக்களிக்கும் வகையில் முன்னுரிமை அளிக்குமாறு வாக்குச்சாவடி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மிக அதிகமாக மாற்றுத்திறனுடைய வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளில் மடக்கு சக்கர நாற்காலி பயன்படுத்திட வேண்டும்  என்றார்.

Tags :
× RELATED பள்ளங்கோயில் கிராமத்தை...