×

திருத்தணியில் நள்ளிரவில் பயங்கரம் வீடு புகுந்து தாய், மகன் வெட்டிக்கொலை

* 30 சவரன் நகை கொள்ளை * மர்ம கும்பலுக்கு வலை

சென்னை: நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து தாய், மகனை  வெட்டிக்கொன்று விட்டு, 30 சவரன் நகை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.திருத்தணி - அரக்கோணம் சாலையில் ஒரு தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. இதில்,தேனி மாவட்டம், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த வனப்பெருமாள் (50) என்பவர்  கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக  பணிபுரிந்து வருகிறார்.இவர் அதே பகுதியில் பி.ஜி.புதூர், பாலாஜி நகரில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி (45), மகன் போத்திராஜா (13), மகள் பவித்ரா (20) ஆகியோருடன் வசித்து வருகிறார். பவித்ராவுக்கு கடந்த ஓராண்டுக்குமுன் திருமணம்  நடைபெற்றது. அவர் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வனப்பெருமாள் பணிக்கு சென்றுவிட்டார்.  அதன்பிறகு வீட்டில் மனைவியும், மகனும் தூங்கியுள்ளனர். நள்ளிரவில் வனப்பெருமாளின் வீட்டுக்குள் மர்ம கும்பல் புகுந்தது. வரண்டாவில் காற்றுக்காக  படுத்திருந்த மாற்றுத்திறனாளியான வீரலட்சுமியை மர்ம கும்பல் சராமாரியாக வெட்டியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த போத்திராஜா எழுந்து வந்தார்.  அவரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது.  பின்னர், ரத்த வெள்ளத்தில் துடித்த அவரது கழுத்தில் மின்வயரால் இறுக்கியுள்ளனர். தாயும், மகனும் அதே இடத்தில் இறந்தனர். இருவரும் இறந்ததை உறுதி செய்த கும்பல், வீரலட்சுமி  கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகை, பீரோவில் இருந்த 22 சவரன் என 30 சவரன் நகையை கொள்ளையடித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியது.

வழக்கம்போல் பணி முடிந்து நேற்று காலை  7 மணியளவில் வனப்பெருமாள் வீடு திரும்பினார். அப்போது, மனைவி மற்றும் மகன் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்ததையும், அவர்களது உடலில் வெட்டு காயம் இருந்ததையும்,  வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததையும் பார்த்து அலறினார். அவரது சத்தத்தை கேட்டு அக்கப்பக்கத்தினர் திரண்டனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட போலீஸ் எஸ்பி பொன்னி, டிஎஸ்பி சேகர், திருத்தணி இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் கொலையாளிகள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,  வனப்பெருமாள் தனியார் தொழிற்சாலையில் செக்யூரிட்டி சூப்பர்வைசர் என்பதால், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நான்கு செக்யூரிட்டிகளை பணியில்  இருந்து நிறுத்தி உள்ளார். இந்தநிலையில் தான் கொலை, கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த சம்பவத்துக்கும்  பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். அதே நேரத்தில் தலைமறைவானதாக கூறப்படும் பணி நீக்கம்  செய்யப்பட்டவர்களை தேடி ஆந்திரா மற்றும் சென்னைக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

அவர்களில் யாராவது பிடிபட்டால் தான் கொலை நடந்ததற்குரிய காரணங்கள் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அதிகாலை நேரத்தில் 2 கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அப்பகுதியினர் கூறுகையில், அதிகாலை நேரத்தில் வனப்பெருமாள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. ஆனால், வீட்டின் கேட் மூடப்பட்டிருந்ததாலும், லைட் எரியாததாலும் தூக்க கலக்கத்தில் யாராவது சத்தம்  போட்டிருக்கலாம் என கருதினோம். காலையில் தான் கொலை நடந்த சம்பவம் தெரிந்து அதிர்ச்சியில் உறைந்தோம் என்றனர்.

Tags : house ,Tiruttani ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்