×

கன்னியாகுமரி மக்களவை தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கடும் குளறுபடிகள் மின்னணு இயந்திரத்தை பார்க்காமலேயே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்

நாகர்கோவில், ஏப். 9: கன்னியாகுமரி மக்களவை தேர்தல் பயிற்சி வகுப்புகள் கடும் குளறுபடிகளுடன் நடைபெற்று வருகிறது. மின்னணு இயந்திரத்தை பார்க்காமலேயே ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியே தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் தேர்தல் பயிற்சியில் ஈடுபட்டனர். தேர்தல் பயிற்சி வகுப்பு தொடங்கும் முன்னரே பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டதில் பெரும் குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த வகையில் புரசீடிங் ஆபீசர் பணிக்கு ஒதுக்கப்பட்டவர்களுக்கு போலிங் ஆபீசர் பணியும் ஒதுக்கப்பட்டு இரு ஆணைகள் பலருக்கு வழங்கப்பட்டன. கல்லூரி பேராசிரியர்கள் இதனால் குழப்பம் அடைந்தனர். இதனால் முதல்கட்ட பயிற்சி வகுப்பில் பலருக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை. புரசீடிங் ஆபீசர் பயிற்சி பெற்றவர்களிடம் ஏன் போலிங் ஆபீசர் பயிற்சிக்கு வரவில்லை? என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த குளறுபடி இரண்டாவது பயிற்சி வகுப்பிலும் தொடர்ந்தது. அத்துடன் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றபோது மின்னணு இயந்திரங்கள் போதிய அளவில் வழங்கப்படவில்லை. அதாவது நாகர்கோவில் இந்து கல்லூரியில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட அறைகளில் ஆசிரியர்கள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இங்கு மொத்தம் 6 இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் பல அறைகளுக்கு மின்னணு இயந்திரங்களே கொண்டு செல்லப்படவில்லை. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெற்ற போதிலும் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்ட பயிற்சி புரசீடிங் ஆபீசர்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே போலிங் ஆபீசர்-1, 2, 3 நிலையில் உள்ளவர்கள் தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடர்பாக போதிய புரிதல் இல்லாத நிலை தொடர்கிறது.

 மின்னணு இயந்திரங்களில் இதுவரை பயிற்சி பெற்றிராத புதிய தேர்தல் அலுவலர்கள் இதனை எப்படி கையாளுவது என்று இப்போது குழப்பம் அடைந்துள்ளனர். அதனை போன்று வாக்குப்பதிவு தொடர்பான தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் இரு மையங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது. பிற மையங்களில் நடத்தப்படவில்லை. இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடுகள் தொடர்பாக அலுவலர்கள் மத்தியில் போதிய புரிதல் இல்லாத நிலை தொடர்கிறது. இது தேர்தல் நாளில் கடுமையாக எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் உட்பட பலர் இதற்கு முன்னர் தேர்தலை சந்திக்காத புதியவர்கள், பயிற்சி நிலையில் இருப்பவர்கள். நன்கு பயிற்சிபெற்ற அலுவலர்களையும் தேர்தல் பணிகளுக்கு உட்படுத்தாத நிலை தொடர்கிறது. இதுவே குளறுபடிகளுக்கு காரணம் என்று கூறப்
படுகிறது.

Tags : Kanyakumari Lok Sabha ,
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு