×

8 வழி பசுமைச்சாலை திட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது

திருவண்ணாமலை, ஏப்.9: சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். சென்னை- சேலம் இடையே, 277 கிமீ தூரம் 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதற்காக, ₹10 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீ, திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிமீ, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 கிமீ, தருமபுரி மாவட்டத்தில் 53 கிமீ, சேலம் மாவட்டத்தில் 38 கிமீ தொலைவில் பசுமைச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதையொட்டி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், பாசன கிணறுகள், வீடுகள், காப்புக்காடு வனப்பகுதிகள் ஆகியவற்றை கையகப்படுத்தும் பணி மிக வேகமாக நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், செங்கம், கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யாறு தாலுகாக்களில் மொத்தம் 92 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டன. அதற்காக, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சிறப்பு அலுவலகங்கள் செயல்பட்டன.

இத்திட்டத்தை, விவசாயிகள் கண்ணீருடன் எதிர்த்தனர். தங்களின் வாழ்க்கை பாதிக்கும் என அதிகாரிகளிடம் கெஞ்சினர். அரசிடம் முறையிட்டனர். தங்களுடைய கழுத்தை பிளேடால் அறுத்தும், கிணற்றில் குதித்தும், விஷம் குடித்தும் விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றனர். அதிர்ச்சியில் சிலர் உயிரிழந்தனர். பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. களத்தில் இறங்கி போராடின. ஆனாலும், விவசாயிகளை நள்ளிரவில் கைது செய்து, அத்துமீறி விளை நிலங்களை தமிழக அரசு அளிவீடு செய்தது. பயிர் விளைந்த நிலங்களில் குறியீடு கற்கள் பதிக்கப்பட்டன.
மேலும், விவசாயிகள் மீது போலீஸ் வழக்கு பதிந்தது. நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தது. எதிர்த்து குரல் கொடுத்த விவசாயிகளையும், பெண்களை போலீஸ் தாக்கியது. விளை நிலங்களில் குறியீடு கற்கள் பதித்து, நில வகை மாற்றம் செய்யப்பட்டன. பதிவேடுகள் திருத்தப்பட்டன. கருத்து கேட்பு கூட்டம் எனும் பெயரில் கண்துடைப்பு நாடகம் நடந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்தது. ஆனாலும், அந்த ஆறுதல் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. விளை நிலங்களை அரசு தொடர்ந்து கையகப்படுத்தியது. கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் கண்ணீரில் தவித்தனர். இந்நிலையில், விவசாயிகள் மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டத்தால், சென்னை- சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. விவசாயிகளின் விளை நிலங்களை கையகப்படுத்தியது செல்லாது, வருவாய்த்துறை பதிவேடுகளில் செய்த வகை மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதை அறிந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஆனந்த கண்ணீர் விட்டனர். நிலம் பறிபோகும் என்ற துயரத்தில் துடித்திருந்த விவசாயிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். பறிபோக இருந்த விளை நிலங்களுக்கு ஓடோடிச்சென்று தரையை முத்தமிட்டனர். தாயின் மடியில் தவழ்வதைப்போல, தங்கள் நிலத்தில் விழுந்து வணங்கினர். இந்த காட்சிகள் நெகிழ்ச்சியாக இருந்தது.

செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தில் திரண்ட விவசாயிகள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். நாச்சிப்பட்டு கிராமத்தில், விளை நிலங்களில் பதித்திருந்த மஞ்சள் வண்ண குறியீடு கற்களை பிடுங்கி வீசியெறிந்தனர். அதேபோல், கலசபாக்கம் அடுத்த நார்த்தாம்பூண்டி கிராமத்திலும், விளை நிலங்களில் பதித்திருந்த குறியீடு கற்களை விவசாயிகள் அகற்றினர். திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே ரவுண்டான பகுதியில் திரண்ட திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இது குறித்து, செங்கத்தைச் சேர்ந்த 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த துணை ஒருங்கிணைப்பாளர் விநாயகம் கூறுகையில், ‘நீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளுக்கு நிம்மதியை அளித்திருக்கிறது. விளை நிலமெல்லாம் தார் சாலையாகுமோ என கவலையில் இருந்ேதாம். ஆனால், மீண்டும் பயிர் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் முடிந்ததும் தமிழக அரசு இந்த தீர்ப்ைப எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமோ என்ற அச்சமும் இருக்கிறது. எனவே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு மதிக்க வேண்டும். மேல்முறையீடு செய்யக்கூடாது என வலியுறுத்துகிறோம். ஒருவேளை, தமிழக அரசு மேல்முறையீடு செய்தாலும், அதையும் சட்டரீதியாக சந்திப்போம்’ என்றார். அதேபோல், 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகி திருவண்ணாமலை அழகேசன் கூறுகையில், ‘விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கும், நியாயத்துக்கும் கிடைத்த வெற்றி. நீதி வென்றிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பறிபோக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு மீண்டும் உயிர் கிடைத்திருக்கிறது’ என்றார். அதேபோல், செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி பகுதியிலும் இந்த தீர்ப்பை வரவேற்று விவசாயிகள் மகிழ்ந்தனர். தங்களுடைய விளை நிலங்களில் கற்பூரம் ஏற்றி வணங்கினர். கோர்ட் தீர்ப்பு தங்களுடைய வாழ்க்கையில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றனர்.

Tags : High Court ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...