×

கிராம ஊராட்சிகளுக்கு குறைவாக வரும் மாநில நிதிக்குழு நிதி பராமரிப்பு பணி செய்ய முடியாமல் ஊராட்சி செயலர்கள் திணறல்

செம்பட்டி, ஏப்.8: கிராம ஊராட்சிகளுக்கு மாநில மானியநிதி குறைவாக வருவதால் ஊராட்சி மன்ற செயலாளர்கள் திணறி வருகின்றனர். இந்த நிதியை வைத்துக்கொண்டு கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியாது என்று புலம்புகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்தில் மணலூர், சித்தரேவு, செட்டியபட்டி, வக்கம்பட்டி, அம்பாத்துரை, ஆலமரத்துப்பட்டி உட்பட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளை பராமரிக்க மாநில நிதிக்குழு மானியநிதி மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் நிதி முழுமையாக கிராம ஊராட்சிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. மின்கட்டணம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் டெண்டர் விடப்பட்டு, ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு இரும்பு குப்பை வண்டி, சி.எப்.எல். மற்றும் எல்.இ.டி பல்புகள் வாங்கியதற்கான பில் தொகைகளை பிடித்துக்கொண்டு கொடுக்கின்றனர்.

இதனால், கிராம ஊராட்சிகளை பராமரிக்க முடியாமல் ஊராட்சி செயலர்கள் திணறி வருகின்றனர். இதுதவிர இதர செலவினங்களுக்கு என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதி பிடித்துக்கொண்டு குறைவாக கொடுப்பதால், பல ஊராட்சிகளில் குடிதண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது.
இதுகுறித்து ஆத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி செயலர்கள் கூறுகையில், ‘‘இரும்பு குப்பைத்தொட்டியை எத்தனை தேவைப்படுகிறது என்று நாங்கள் சொல்வதற்கு முன்பே அவர்களாகவே கிராம ஊராட்சிகளுக்கு 10 முதல் 15 வரை குப்பைத் தொட்டிகளை அனுப்பி வைக்கின்றனர். இதற்கான தொகையை மாநில நிதிக்குழு மானியநிதி வரும்பொழுது பிடித்துக்கொண்டு எங்களுக்கு மீதிப்பணத்தை கொடுக்கிறார்கள். ஒவ்வொரு மாதம் கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் நாங்கள் கிராம ஊராட்சிகளை பராமரிக்க முடியாமல் திணறி வருகிறோம். ஊராட்சிமன்ற தேர்தல் நடத்தினால்தான் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும். ஒருசில ஊராட்சிகளில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு மற்றும் பராமரிப்பதற்கு ஆட்கள் வர தயங்குவதால், ஊராட்சி செயலர்களே தங்கள் உறவினர்களை வைத்து குடிதண்ணீர் குழாய் உடைப்புகளை சரிசெய்து வருகின்றனர்’’ என்று தெரிவித்தனர்.

Tags :
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு