×

விருதுநகரில் மாரியம்மன் பொங்கல் விழா போலீஸ் பற்றாக்குறையால் போக்குவரத்து நெரிசல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி

விருதுநகர், ஏப். 8: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஆனால், பாதுகாப்பு போலீசார் பற்றாக்குறையால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.விருதுநகர் மாரியம்மன்கோவில் பொங்கல் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று பொங்கல் பண்டிகையும், இன்று அக்னிச்சட்டி, நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் நேற்று பொங்கல் வைத்து, மெட்டை போடுதல், மாவிளக்கு எடுத்துல், உருண்டு கொடுத்தல், ஆயிரங்கண் பானை, தீச்சட்டி எடுத்தும் நேர்த்தி கடன்கைள செலுத்தி வருகின்றனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் மூன்று நாட்களில் கோவில் வளாகத்தில், வெளிப்புறங்களில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் வரை ஈடுபடுத்தப்படுவர். ஆனால் நடப்பு பொங்கலில் 3 டிஎஸ்பி தலைமையில் 9 இன்ஸ்பெக்டர்கள், 60 எஸ்ஐகள் உட்பட 495 போலீசார் மட்டும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து போலீசார் கடந்த ஆண்டுகளில் சுமார் 50 பேர் ஈடுபட்ட நிலையில் தற்போது ஒற்றை இலக்கத்தில் போக்குவரத்து போலீசார் உள்ளனர். இதனால் நகரில் மீனாம்பிகை பங்களா, கார்நேசன், அல்லம்பட்டி, எம்ஜிஆர்சிலை, ஆத்துப்பாலம், கோவில் வெளிப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த போலீசார் இல்லை. ஆட்டோக்கள், கார்கள், வேன்கள், லோடு ஆட்டோக்கள், டூவீலர்கள் இஷ்டத்திற்கு சென்றன. இதனால் பல இடங்களில் மணிக்கணக்கில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.இது குறித்து போலீசார் கூறுகையில், விருதுநகர், சிவகாசி கோவில் திருவிழாக்கள் மற்றும் மாவட்டத்தில் 130 கோவில் திருவிழா ஒரே நேரத்தில் வந்ததாலும், தேர்தல் பிரச்சாரம், பந்தோபஸ்து. பிரதமரின் கோவை வருகை பாதுகாப்பு பணி என போலீசாரை பிரித்து அனுப்பியதால் பொங்கல் பணியில் போலீசார் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்தனர்.இவை முன்கூட்டி தெரிந்திருந்தும் கூடுதல் போலீசாரை வரவழைக்காமல் குறைவான போலீசாரை பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். இன்று அக்னிச்சட்டி நேர்த்திக்கடன் செலுத்த விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிய இருக்கும் நிலையில் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவில் முறையற்ற பாதுகாப்பு வழங்கி வருவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : festival ,Virudhunagar ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...