×

திருச்சுழி பகுதியில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்கப்படுமா? ஏழை, எளிய மாணவர்கள் எதிர்பார்ப்பு

திருச்சுழி, ஏப். 8: திருச்சுழி பகுதியில் ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் ஏழை, எளிய மாணவ, மாணவியர் அதிகமாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் உயர்கல்விக்காக கல்லூரி செல்வதற்கு, மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய வெளியூர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இவர்கள் படிப்பதற்கு ஏதுவதாக நரிக்குடி பகுதியில் அரசு கலை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 2011ல் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்றும் அப்போதைய கல்விதுறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து அதன்படி, திருச்சுழியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில், ஒரு உறுப்பு கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் வந்த ஆட்சி மாற்றத்தால் திருச்சுழி பகுதிக்காக ஒதுக்கப்பட்ட அரசு கல்லூரியை, சாத்தூருக்கு மாற்றினர். இதனால் திருச்சுழி சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்தனர். பின்பு சில வருடங்களுக்கு பின்பு அருப்புக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாடகை கட்டிடத்தில் அரசு உறுப்புக்கல்லூரி இயங்கி வந்தது. இதில் திருச்சுழி, நரிக்குடி பகுதியிலுள்ள 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வந்தனர். பின்பு அரசு உறுப்புக்கல்லூரிகென இடம் தேர்வு செய்யப்பட்டு பந்தல்குடி செல்லும் வழியில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் இக்கல்லூரிக்கு பஸ் போக்குவரத்தின்றி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மாணவர்களின் பெற்றோர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து நரிக்குடி ரமேஸ் என்பவர் கூறுகையில் எங்கள் கிராம பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் படிக்க வசதியின்றி மாணவ, மாணவியர்கள் படிக்க முடியாமல், பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலே திருமணம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. திமுக ஆட்சியில் திருச்சுழி பகுதிக்கு அரசு கல்லூரி வேண்டும் என கோரிக்கை விடுத்ததன்பேரில் இப்பகுதியில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சி வந்த பின்பு இப்பகுதிக்கு கொடுக்கப்பட்ட கல்லூரி சாத்தூருக்கு மாற்றப்பட்டது. இதனால், இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், விவசாயம் நலுவடைந்ததால் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்றி தவிக்கின்றனர். எனவே, திருச்சுழி, நரிக்குடி பகுதியில் அரசு உறுப்புக்கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி மையம் தொடங்க வேண்டும் என்றார்.

Tags : government ,church ,Tiruchuri ,
× RELATED அலங்காநல்லூர் அருகே புனித காணிக்கை அன்னை தேவாலய தேர் பவனி விழா