×

பட்டிவீரன்பட்டி அருகே பயிர்களை நாசம் செய்யும் காட்டுபன்றிகள் வனத்துறை கட்டுப்படுத்துமா?

பட்டிவீரன்பட்டி, ஏப்.8: பட்டிவீரன்பட்டி அருகே விவசாய தோட்டங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். பட்டிவீரன்பட்டி அருகே தாண்டிக்குடி மலையடிவாரம் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. இப்பகுதியில் ஆண்டுதோறும் பெய்யக்கூடிய வடகிழக்கு மற்றும் தென்மேற்கு  பருவமழை காலங்களில் கிடைக்கும் ஓரளவு தண்ணீரைக் கொண்டு விவசாயம் நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது கிணறுகள் வறண்டு விட்டதால் தற்காலிகமாக குழிஅமைத்து அதில் பாலித்தீன் உறைகளால் கிணறுவெட்டி அதில் தண்ணீரை தேக்கி விவசாயம் செய்து வருகிறார்கள். வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீர், இரை தேடி இந்த விளைநிலங்களுக்குள் காட்டு பன்றிகள் புகுவது தொடர்கதையாகி வருகின்றது. குறிப்பாக இரவு நேரங்களில் புகுந்து எல்லா பயிர்களையும் துவம்சம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், ‘‘மழை அதிகமில்லாத பகுதியாக  பட்டிவீரன்பட்டி பகுதி உள்ளது. தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் அடர்ந்த  காடுகளில் மழை இல்லாமல் போனதால் கடுமையான வறட்சி  நிலவுகின்றது. இதனால்  காட்டில் தண்ணீர் இல்லை. அடர்ந்த மலைகளுக்கு இடையே வரக்கூடிய நீரூற்றுகள் எதுவும் இல்லாத நிலையில் விளைந்த தோட்டங்களுக்குள் காட்டு பன்றிகள் புகுவது தொடர்கதையாகி வருகின்றது. இவை பயிர்களை நாசமாக்கிவிடுகின்றன. இதனால் பெரும் சேதத்தை சந்தித்து வருகிறோம். காட்டு பன்றிகள் மட்டுமின்றி, மான், கேழையாடுகள் போன்றவையும் புகுந்துவிடுகின்றன. இதனை வனத்துறையினரிடம் சொன்னால் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கடன் வாங்கி நாங்கள் விளைவித்த பயிர்கள் எல்லாம் நாசமாகி வருகிறது. எனவே வனவிலங்குகள் வருகையை கட்டுப்படுத்த வேண்டும். வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : Crops ,Pattiveeranppatti ,
× RELATED ராஜபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல்