×

கோடையை சமாளிக்க கூடலூர் முதல் வீரபாண்டி வரை தடுப்பணைகள் தேவை விவசாயிகள் கோரிக்கை

உத்தமபாளையம், ஏப்.8:  கூடலூர் முதல் வீரபாண்டி வரை முல்லை பெரியாற்றில் தடுப்பணை கட்டினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாய பரப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.கூடலூர் லோயர்கேம்பில் தொடங்கி வைகை அணை வரை ஏறத்தாழ நீர்வழிப்போக்குவரத்து சுமார் 80 கி.மீ  தூரம் உள்ளது. முல்லை பெரியாற்றின் தண்ணீரை வழிமறித்து 5 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு காரணம் ஆற்றுப்படுகைகளை சுற்றி உள்ள தோட்டநிலங்களுக்கு நிலத்தடிநீர்மட்டம் உயரவும், விவசாயம் பல ஆயிரம் ஏக்கர் பெருகவும் தடுப்பணைகள் உதவுகின்றன. மேலும் மணல் உற்பத்தி பெருகவும், வறண்ட காலங்களில் தண்ணீர் எந்தவித பிரச்னையும் இல்லாமல் கிடைக்கவும் உதவுவதால் தடுப்பணைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக கம்பம், கூடலூர்,  ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக் கூடிய விவசாயிகள், இங்குள்ள ஆற்றுப்படுகைகளில் உள்ள விவசாய நிலங்கள், தோட்ட நிலங்கள் பயன்பெற தடுப்பணைகளை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து கடந்த 10  ஆண்டுகளுக்கு முன்பே பொதுப்பணித்துறை அதிகாரிகள்  தடுப்பணை கட்டக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தனர். பல லட்சக்கணக்கான ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழகஅரசிற்கு பரிந்துரை செய்தனர். ஆனால், அத்தோடு  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இதில் ஆர்வமே காட்டாமல் ஒதுங்கி கொண்டதால் அரசிற்கு வைக்கப்பட்ட கோரிக்கை முடக்கப்பட்டது. இதனால்  விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ``முல்லை பெரியாறு பாயும் ஆற்றுப்படுகைகளில் ஆங்காங்கே தடுப்பணைகள் உள்ளன. சீறிப்பாய்ந்து வரக்கூடிய தண்ணீரை நிறுத்தி பின்பு செல்வதன் மூலமாக நிலத்தடிநீர்மட்டம் உயரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. கிணறுகளில் தண்ணீர் ஊற்று அதிகரிக்கும். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகளோ கம்பம் முதல் ராயப்பன்பட்டி, வீரபாண்டி வரை உள்ள ஆற்றுப்படுகையில் தடுப்பணை கட்டுவது பற்றி கண்டு கொள்ளாமல் உள்ளனர். தேவையான நிதியை ஒதுக்க உரிய அதிகாரிகள் பலமுறை சென்று பரிந்துரை செய்தால்தான் கட்டப்படும். ஆனால், எந்த ஆர்வமும் இல்லாமல் உள்ளதால் அதிகாரிகள் மீது தேவையில்லாத அதிருப்திதான் ஏற்படுகிறது’’ என்றனர்.

Tags : Kodalur ,Veerapandi ,
× RELATED வீரபாண்டி தடுப்பணையில் குளித்து மகிழ...