×

தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டு வழங்காமல் இழுத்தடிப்பு

சேலம், ஏப்.8: சேலத்தில் நடந்த பயிற்சியில், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கான தபால் வாக்குச்சீட்டு வழங்காமல் இழுத்தடித்ததாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடக்கிறது. இப்பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ேசலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் 5 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 20 ஆயிரம் பேர் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்கின்றனர். இதனிடையே நேற்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள 11 இடங்களில் நேற்று நடந்தது. ஏற்கனவே, 12, 12பி விண்ணப்பம் அளித்திருந்தவர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு, தபால் வாக்குப்பதிவு நடந்தது.

இதனிடையே சேலம் தவிர்த்து இதர தொகுதிகளுக்கான வாக்குச்சீட்டு வழங்க, இழுத்தடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளும், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதிகளுக்குள் வருகிறது. இதில், தேர்தல் நாளன்று, சேலம் தொகுதிக்குள்ளாகவே பணிபுரிபவர்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளிலயே தங்களது வாக்குப்பதிவை மேற்கொள்ள இடிசி (தேர்தல் பணி சான்றிதழ்) போதுமானது. ஆனால், பிற தொகுதிகளில் வாக்கு உள்ளவர்கள் தபால் மூலமே வாக்களிக்க முடியும். அதன்படி, மேட்டூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள் தர்மபுரிக்கான வாக்குச்சீட்டும், ஏற்காடு, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்றத்தை  சேர்ந்தவர்கள் கள்ளக்குறிச்சிக்கான வாக்குச்சீட்டும், சங்ககிரியைச் சேர்ந்தவர்கள் நாமக்கல்லுக்கான வாக்குச்சீட்டும் கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால், தபால் வாக்குப்பதிவு தொடங்கி, மாலை வரையிலும் யாருக்கும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படவில்லை.

உதாரணமாக, சேலம் மேற்கு தொகுதிக்கு ஜங்சன் மெயின் ரோடு தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி நடந்தது. இங்கு பணிபுரிந்த வெளி தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படவே இல்லை. இதுகுறித்து கேட்டபோது, சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், நீங்கள் எல்லாம் வாக்களிக்கவே வேண்டாம் என அநாகரிகமாக பேசினார். மேலும், முறையான ஏற்பாடுகளும் செய்யாததால் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்பட்டது. இதனால், அதிருப்தியடைந்து பலர் வாக்களிக்காமலே திரும்பி சென்றுவிட்டனர். இதே நிலை தான் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி மையங்களிலும் நடந்துள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகளை பதிவு செய்ய விடாமல் தடுக்க, வேண்டுமென்றே இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் அரசுகளுக்கு சாதகமான அதிகாரிகளின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரசு ஊழியர்கள் மட்டும் ஆசிரியர்களின் நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு, திடீரென வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு, தபால் வாக்குப்பதிவு நடந்தது.

Tags : Dharmapuri ,constituencies ,Kallakurichchi ,Namakkal ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...