×

சேலம் புறநகர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

சேலம், ஏப்.8:சேலம் புறநகர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் உறுதியளித்துள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், நேற்று வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சன்னியாசிகுண்டு பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எஸ்.ஆர்.பார்த்திபனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார். தொடர்ந்து வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால், வெள்ளி கொலுசு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜிஎஸ்டி வரியை குறைப்பதுடன், வெள்ளி தொழிலாளர்களின் நலன்காக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன், விவசாய நகைக்கடன், கல்விக்கடன் ரத்து செய்யப்படுவதுடன், ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ₹6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். சன்னியாசிகுண்டு, எருமாப்பாளையம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதே நிலை தான் சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளில் காணப்படுகிறது. இந்த அவல நிலையை போக்க புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றித் தரப்படும்,” என்றார்.

தொடர்ந்து எருமாப்பாளையம், ஆண்டிப்பட்டி, பனங்காடு, திருமலைகிரி, வட்டமுத்தாம்பட்டி, பெருமாம்பட்டி, முருங்கப்பட்டி, மூடுதுறை, அரியாகவுண்டன்பட்டி, கீரைப்பாப்பம்பாடி, மாரமங்கலத்துப்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திமுக ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், மாணிக்கம், நிர்வாகிகள் ராஜா, பாரப்பட்டி குமார், விக்டர், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தநாரி, கொமதேக லோகநாதன், சிபிஐ மோகன், சிபிஐ (எம்) ராமமூர்த்தி, விசிக அய்யாவு, வாழ்வுரிமை கட்சி அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : suburbs ,Salem ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...