ஊட்டி, ஏப். 8:ஊட்டி என்.சி.எம்.எஸ்., பார்க்கிங் தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தின் பின்புறம் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான என்.சி.எம்.எஸ்., பார்க்கிங் தளம் உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா செல்ல கூடிய சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை இந்த பார்க்கிங் தளத்தில் நிறுத்தி விட்டு பூங்காவிற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். என்.சி.எம்.எஸ்., பார்க்கிங் தளத்தில் 300 பஸ்கள் நிறுத்த முடியும். இந்நிலையில், மண் தரையாக இருந்த பார்க்கிங் தளத்தில், கான்கிரீட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பணிகள் துவக்கப்பட்ட நிலையில், இன்னும் பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதனிடையே தற்ேபாது ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு வர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்த வசதியாக என்.சி.எம்.எஸ்., பார்க்கிங் தள சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.