மாவட்டத்தில் அரசு உழியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்

ஈரோடு, ஏப். 8:  ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு உழியர்களுக்கான தபால் ஓட்டு பதிவு தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் மூலமாக தங்களது ஓட்டினை போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று மதியம் 2 மணிக்கு மேல் அரசு ஊழியர்கள் தங்களது ஓட்டினை தபால் மூலமாக போட தனித்தனியாக வாக்குசாவடி அமைக்கப்பட்டது. இதில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரி நடந்த தபால் ஓட்டு பதிவில் அரசு ஊழியர்கள் தங்களது ஓட்டினை செலுத்துவதற்கு ஏதுவாக ஈரோடு மக்களவை தொகுதிக்கும், திருப்பூர் மக்களவை தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

 மேலும், பிற தொகுதிகளை சேர்ந்தவர்களும் வாக்களிக்க தனி வாக்குசாவடி அமைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் ஓட்டு பெட்டி திறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள் தங்களது வாக்கு சீட்டில் அவர்களுக்கு பிடித்த வேட்பாளருக்கு தங்களது ஓட்டினை போட்டனர். பின்னர் அந்த வாக்குச்சீட்டை மடித்து ஓட்டு பெட்டியில் போட்டனர்.  ஈரோடு மேற்கு தொகுதிக்கு ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு பள்ளியில் தபால் ஓட்டுப்பதிவு ஈரோடு ஆர்டிஓ முருகேசன் தலைமையில் நடந்தது. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>