×

பவானிசாகர் அருகே தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்

சத்தியமங்கலம்,  ஏப்.8:  பவானிசாகர் அருகே யானைகள் தோட்டத்தில்  புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தின. பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் யானை,  மான் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில்  கடுமையான வறட்சி நிலவுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள்  இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில்  புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, தீவன சோளம் உள்ளிட்ட  பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு  வெளியேறிய 3 காட்டு யானைகள் கரிதொட்டம்பாளையம் கிராமத்திற்குள் நுழைந்து  விவசாயி ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை  மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதுகுறித்து தகவலறிந்த விவசாயிகள் பவானிசாகர் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று  விவசாயிகளுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள்  விரட்டினர். யானைகள் புகுந்ததால் 100க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்  சேதமடைந்தன. சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

யானைகள் வனத்தை  விட்டு வெளியேறாமல் இருக்க வெட்டப்பட்ட அகழி மேடாக உள்ளதால் எளிதாக யானைகள்  வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுவதாகவும் உடனடியாக அகழியை ஆழம் மற்றும் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : garden ,Bhavanisagar ,
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!