×

பாரீசில் இருந்து சென்னைக்கு கடத்திய 4 தங்க விநாயகர் சிலைகள் பறிமுதல்

சென்னை, ஏப். 8: பாரீசில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தப்பட்ட ₹65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். பாரீசில் இருந்து டெல்லி வழியாக ஏர் இண்டியா விமானம் நேற்று மாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கையை சேர்ந்த ராஜலிங்கம் மகிந்தன் (30) என்பவர் சென்னை வந்தார். இவர், தன்னிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் சென்றார். அவர் சென்ற வழியில் பொருத்தப்பட்டிருந்த கருவியில் இவரது உடமைக்குள் ஏதோ கடத்தல் பொருள் இருப்பதற்கான சிக்னல் ஒலித்தது. இதனால் அதிகாரிகள், ராஜலிங்கம் மகிந்தனை மீண்டும் உள்ளே அழைத்து, அவரது உடமைகளை ஒவ்வொன்றாக சோதனையிட்டனர். அப்போது, அவரது சூட்கேசில் துணிகளுக்கு இடையில் 4 விநாயகர் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த சிலைகள் 12 காரட் தங்கத்தால் செய்யப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது.

அதன் மதிப்பு ₹65 லட்சமாகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் பாரீசில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சூபர்வைசராக பணியாற்றி வருகிறேன் என்றும், இந்த சிலைகள் என்னுடையதல்ல. என்னுடைய நண்பர் என்னிடம் கொடுத்தார். இதை சென்னை எடுத்துச் சென்றால் விமான நிலையத்துக்கு வெளியில் ஒருவர் உங்களுக்காக காத்திருப்பார். அவர் இதை வாங்கிக்கொண்டு உங்களுக்கு ஏதாவது அன்பளிப்பு தருவார் என்று கூறினார். அதை நம்பித்தான் நான் வாங்கி வந்தேன். இந்த தங்க சிலைகள் 12 கேரட்டால் செய்யப்பட்டதால் உங்களுக்கு பிரச்சனை எதுவும் வராது என்று அவர் உறுதியளித்ததால் எடுத்து வந்தேன், என்று கூறினார். பின்னர், ராஜலிங்கத்தை கைது செய்து, அவரிடம் பிரான்ஸில் இருந்து இவற்றை கொடுத்த நண்பர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : idols ,Vinayagar ,Chennai ,Paris ,
× RELATED பெரியகுப்பத்தில் உள்ள கோயிலில் பஞ்சலோக சிலை திருட்டு