×

அண்ணாநகர் தெற்கு பகுதியில் வாக்கு சேகரிப்பு மோடி அரசின் வேதனைகளை மனதில் வைத்து வாக்களியுங்கள்: திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரசாரம்

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று காலை அண்ணாநகர் தெற்கு பகுதியில் 105, 105அ, 108, 108அ மற்றும் 106 ஆகிய வட்டங்களில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், பகுதி செயலாளர் ராமலிங்கம் மற்றும் அந்தந்த வார்டு திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். செல்லும் இடமெங்கும் பொதுமக்கள் திரண்டு, தயாநிதி மாறனை வரவேற்று, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதாக உறுதியளித்தனர். பிரசாரத்தின் போது தயாநிதி மாறன் பேசியதாவது: வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள குறைகள் மற்றும் அடிப்படை தேவைகளை தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றவுடன் அவற்றை உடனடியாக நிறைவேற்றுவேன். எனவே, திமுகவிற்கு வாக்களியுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசால் ஏற்பட்ட லாபத்தை விட நஷ்டம் தான் அதிகம். இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அடுத்த நாள் காலை முதல் நாம் அனைவரும் ஏடிஎம் வாசலில் வரிசையாக நின்றோம். ஆனால் சேகர் ரெட்டி என்ற மணல் வியாபாரி வீட்டில் மட்டும் ரூ.120 கோடிக்கு வெறும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தது எப்படி?.

ஜிஎஸ்டியால் சிறு குறு தொழில் நசுங்கிவிட்டது. அதேபோல், கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொன்னார். ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னார். அதையும் செய்யவில்லை. இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 4 முறை மட்டும்தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்துள்ளார். ஆனால் தேர்தல் வருகிறது என்றவுடன் 5 முறை தமிழகம் வந்துள்ளார். ஒக்கி, வர்தா, கஜா புயல் பாதிக்கப்பட்ட போது ஒருமுறை கூட தமிழகம் வந்து மக்களுக்கு ஆறுதல் கூறாத அவரை திருப்பி ஆட்சியில் அமர வைக்க கூடாது. நீட் தேர்வை கொண்டுவந்து நம்முடைய மாணவர்கள் அனைவரும் மருத்துவர் ஆவதை தடுத்தவர். கண்டிப்பாக திமுகவுக்கு வாக்களித்தால் நீட்டை முழுவதும் ஒழித்திடுவோம். 2004ம் ஆண்டு தேர்தலின்போது தண்ணீர் பிரச்னை இருப்பதாக மக்கள் கூறியதால், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் அதிமுக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், இளைஞர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலை மாற, துன்பங்களில் இருந்து விடுபட, கடந்த 5 ஆண்டு கால மோடி அரசின் வேதனைகளை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vanni Varna ,Varanasi ,Tamil Nadu ,
× RELATED வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை...