காவல்காரன்பட்டி, ஆர்டி மலையில் 100 சதவீதம் மாற்று திறனாளிகள் வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி

தோகைமலை, ஏப். 8: கரூர் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் புழுதேரி சாந்திவனம் மனநல காப்பகம் சார்பாக காவல்காரன்பட்டி மற்றும் ஆர்டிமலையில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆர்டி மலையில் நடந்த பேரணிக்கு அரசு பெண்கள் உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியை ராணி தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சின்னையன், சங்கப்பிள்ளை, சாந்திவனம் மனநல காப்பகத்தின் இயக்குநர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்டிமலை கடைவீதியில் தொடங்கி திருச்சி தோகைமலை மெயின்ரோடு, விராச்சிலேஸ்வரர் கோவில், நடுத்தெரு வழியாக அரசு பெண்கள் உயர்நிலை பள்ளிக்கு விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க செய்வோம் என்று அனைவரும் தரையில் அமர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் சாந்திவனம் மனநல காப்பகத்தின் மேலாளர் பாபு மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காவல்காரன்பட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரி, ஊராட்சி செயலாளர் கலியராஜ் மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: