×

தாம்பரம் பகுதியில் தீவிர பிரசாரம் பெட்ரோல் விலையை குறைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன்: திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு உறுதி

தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று சிட்லப்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் திமுக தோழமை காட்சிகளை சேர்ந்த பகுதி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் உடன் சென்று பிரசாரம் செய்தனர். அப்போது டி.ஆர்.பாலு பேசியதாவது: இந்தியாவில் உள்ள 125 கோடி மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ மோடியிடம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். அதாவது, தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போடுகிறோம். இதற்கு அநியாய வரியை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு லிட்டர் பெட்ரோல் 74-75 ரூபாய். இது நியாயமான விலை கிடையாது. பெட்ரோல் விலையை அது சம்மந்தப்பட்ட அமைச்சர், அரசாங்கம், பிரதமர் ஆகியவர்கள் தான் நிர்ணயம் செய்யவேண்டும். ஆனால் இந்த விலையை தற்போது சம்மந்தப்பட்ட நிறுவனம் தான் நிர்ணயிக்கிறது.

அப்படி நிறுவனமே விலையை நிர்ணயித்தால் அது பொதுமக்களுக்கு சாதகமாக இருக்காமல் அவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும். எனவே இதுபோன்ற நிறுவனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மோடியின் நிர்வாகமே காரணம். எனவே இந்த தேர்தலில் என்னை வெற்றி பெறச்  செய்தால் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு 40 ரூபாயாக பெட்ரோல் விலையை  குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நேற்று மாலை திருநீர்மலை சாலை, காந்தி சாலை, கிஷ்கிந்தா சாலை, கன்னடபாளையம், பழைய தாம்பரம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து அவர் ஓட்டு சேகரித்தார்.

Tags : DM Balu ,DMK ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...