×

பா.ஜவை ஆதரித்து பிரசாரம் செய்தவரை போலி பாதிரியார் என்று கூறி பிடித்து சென்ற பறக்கும்படை தாசில்தார்

திங்கள்சந்தை, ஏப்.8:  கன்னியாகுமரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கருங்கல் பகுதியை சேர்ந்த பாதிரியார் டேவிட் ரசூல் வாகனத்தில் மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று திங்கள்சந்தை பகுதியில் அவர் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். மத்திய அரசின் சாதனைகளை விளக்கியும், பொன்.ராதாகிருஷ்ணன் மாவட்டத்திற்கு செய்த வளர்ச்சி பணிகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். அப்ேபாது அங்கு வந்த பறக்கும்படை தாசில்தார் இக்னேஷியஸ் சேவியர் தலைமையிலான அதிகாரிகள், நீங்கள் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்துகொண்டு  வாக்கு கேட்கலாமா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நீங்கள் போலி பாதிரியார். உங்களிடம் விசாரணை நடத்தவேண்டும். வாகனத்தில் இருந்து இறங்கி என்னுடன் வரவேண்டும் என்று தாசில்தார் இக்னேஷியஸ் கூறினார். ஆனால் நான் உண்மையான பாதிரியார். கருங்கல் பகுதியை சேர்ந்தவர் என்று அவர் கூறினார். ஆனால் அதை கேட்க தயாராகாத இக்னேஷியஸ் சேவியர் வலுக்கட்டயமாக அவரை தனது வாகனத்தில் ஏற்றி வந்து இரணியல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். உண்மை பாதிரியார் இப்படி பிரசாரம் செய்யமாட்டார். எனவே இவர் மீது வழக்கு போடுங்கள் என்றார். போலீசார், அவர் உண்மை பாதிரியாரா பொய் பாதிரியாரா என்பது எங்கள் பிரச்னையில்லை. ஜனநாயக நாட்டில் யாரும் யாருக்கும் வாக்கு கேட்க உரிமை உண்டு. அதற்காக வழக்கு பதிவு செய்ய முடியாது என்றனர். இதையடுத்து தாசில்தாருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாதிரியாரை பறக்கும்படை பிடித்து சென்ற தகவல் அறிந்த பா.ஜ., அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். ஜனநாயக நாட்டில் பாதிரியார் பிரசாரம் செய்ய முடியாதா? அவர் அளவிற்கு அதிகமாக பணம் வைத்திருந்தாரா? எதற்காக அவரை பிடித்து வந்தீர்கள் என்று கேட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை விடுதலை செய்யாவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து போலீசார் எஸ்பியை அழைத்து பேசினர். அவரின் உத்தரவையடுத்து போலீசார் பாதிரியாரை அனுப்பி வைத்தனர்.

Tags : cleric ,priest ,BJP ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...