×

வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி

விழுப்புரம், ஏப். 8:  விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி வீடு, வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணியை ஆட்சியர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. இதனிடையே மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. விழுப்புரம் நகரில் ரங்கநாதன் வீதியில் ஆட்சியர் சுப்ரமணியன் பூத் சிலிப் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், பூத் சிலிப் வழங்கும் பணிகள் அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளில் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதனை வைத்துக்கொண்டு தேர்தலில் வாக்களிக்க முடியாது. பெயர், விவரங்கள், வாக்குச்சாவடி எண்கள் ஆகியவை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். வரும் 12ம் தேதிக்குள் இந்த பூத் சிலிப் முழுமையாக வழங்கி முடிக்கப்படும். விடுபடுபவர்களுக்கு மேலும் ஓரிரு நாட்களில் வழங்கப்படும். மக்களவை தேர்தலுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் 3,227 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 252 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 1,497 வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். ஆட்சியர் அலுவலகம், தேர்தல் ஆணையத்தாலும் நேரடியாக கண்காணிக்கப்படும். 50 சதவீதம் வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் காலை 6 மணிக்கே பணிகளை தொடங்கிவிட வேண்டும். வாக்களிப்பதை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரத்தில் சீட்டுகள் அனைத்தும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில் ஒரே நேரத்தில் அதிக வாக்காளர்கள் வரும்போது அவர்களை டோக்கன் கொடுத்து பக்கத்து அறையில் அமர வைத்து வரிசை அடிப்படையில் கூப்பிட்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகள் முன்பு சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. கோடையில் மயக்கம் போன்றவை ஏற்படாமலிருக்க ஓஎஸ் கரைசல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Tags : Booth Chile ,voters ,
× RELATED பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது;...