×

மூடிக்கிடக்கும் கிராம சேவை மையம்

நெய்வேலி, ஏப். 8:  நெய்வேலி அருகே உள்ளது பெரியகாப்பான்குளம் ஊராட்சி. இங்கு சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இக்கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் நூறு நாள் வேலை திட்டம், பிறப்பு, இறப்பு, பள்ளி மாணவர்களின் சான்றிதழ் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்றவற்றை எளிதில் பெறுவதற்கு கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சேவை மையம் அமைக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நலன் கருதி கடந்த 2014-2015  ஆண்டு ஊராட்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் 14.43  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டிடம்  கட்டப்பட்டது. ஆனால் தற்போது ஊராட்சியில் கிராம சேவை மையம்  செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்குள்ள மக்கள் சான்றிதழ் பெறுவதற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்த சேவை மையத்தில் சிலர் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை போட்டு விட்டு செல்கின்றனர். இதை ஊராட்சி நிர்வாகம் மற்றும் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே கிராம மக்களின் நலன் கருதி கிராம சேவை மையத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Gram Service Center ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...