×

சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ கவர்னர் மீது பேத்தி புகார்: கிரண்பேடி விளக்கம்

புதுச்சேரி, ஏப். 7:  கவர்னர் கிரண்பேடி மீது அவரது பேத்தி குற்றம்சாட்டி பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவை நீக்க யூ டியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் பேத்தி யூ டியூப்பில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மொபைல் போனில் அவரே பேசி பதிவு செய்த அந்த வீடியோவில், `நான் கிரண்பேடியின் ஒரே பேத்தி. அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையில் எவ்வளவோ பிரச்னைகள் வந்திருக்கின்றன. அப்போது உங்கள் பிரச்னைகளுக்கு இடையில் வரமாட்டேன் என்று கூறினீர்களே பாட்டி. இப்போது மட்டும் ஏன் பாட்டி வருகிறீர்கள். போலீஸை வைத்து அப்பாவை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள். என்னை யாரும் கடத்தவில்லை. நான் அப்பாவுடன் சந்தோஷமாக இருக்கிறேன்’ என கூறி தனது தந்தையை காட்டுகிறார். தொடர்ந்து அறைக்குள் வந்த கிரண்பேடி பேத்தி, எனது அம்மாவை நினைத்தும், பாட்டியை நினைத்தும் வெட்கப்படுகிறேன். என் அப்பாவுக்கு ஆதரவு தர விரும்புவோர் கருத்தை பதிவிடுங்கள் என்று குறிப்பிட்டு வீடியோவை நிறைவு செய்கிறார்.

 இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டபோது, `இது முடிந்து போன விவகாரம். நீதிமன்றம் அளித்த நோட்டீஸை வழக்கறிஞர் மூலம் யூ டியூப்பில் அளித்து விட்டோம். குழந்தை இப்போது விளையாட்டுத்தனமாக பேசுகிறது. குழந்தையின் தலையீட்டால் இது மிகவும் உணர்ச்சிகரமாக மாறியிருக்கிறது. இதுகுறித்து கருத்துகள் கூறவோ, எழுதுவதோ பொருத்தமாக இருக்காது’ என்றார். மேலும், இவ்வீடியோவின் கீழ் கிரண்பேடி பதிவிட்டுள்ள கருத்து விவரம்: `என் பேத்தி கூறியதை பெரிதாக எடுத்துக் கொண்டு இதற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. அவள் எப்போதும் என் பேத்தி தான். கணவனின் மாந்திரீக செயல்களிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் முழு உரிமை என் மகளுக்கு இருக்கிறது. என் மகளை நான் எப்படி ஆதரிக்கிறேனோ அதே ஆதரவு அவளது மகளுக்கும் தேவை. இது தொடர்பான வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்புக்காக நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல்துறையினர் இதுகுறித்து விசாரிப்பதோடு, ஆய்வும் செய்யலாம்.
  வீடியோ பதிவை பற்றி ஒன்றும் தெரியாததை போல பேத்தியின் முன்பு அவரது அப்பா அமர்ந்துள்ளார். அவர் தனது மாந்திரீக செயல்களை நிறுத்த வேண்டும். இதற்கான ஆவணங்கள் அதிகளவில் இருக்கின்றன. அதனால் இதுபற்றி தெரிவிக்கும் முழு பொறுப்பில் உள்ளேன்’ என்று பதிவிட்டுள்ளார்

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...