×

தஞ்சையில் தேர்தல் விதிமீறி தமாகாவினர் பிரசாரம்

தஞ்சை, ஏப்.7: தேர்தல் விதிமுறைகள் மீறி தமாகாவினர் தஞ்சையில் இரண்டு சக்கரவாகனம் மற்றும் கார்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடுகிறது. தமாகா வேட்பாளர் நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களது சின்னத்தை தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம் பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்கான தீவிர முயற்சியில் தமாகா இறங்கியுள்ளது. இதற்காக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கடந்த 1ம் தேதி தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அன்றைய தினம் அந்த பகுதியில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் தமாகா சின்னமான ஆட்டோ, கார்களில் தஞ்சை காமராஜர் சிலை முன்பு தொண்டர்கள் வந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. காலை நேரம் என்பதால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் வாகனங்கள், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து பழைய பஸ் ஸ்டாண்ட், ரயிலடி என்று தஞ்சை நகர பகுதியில் கார்களிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் வரிசையாக அணிவகுத்து சென்று போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.

ஆனால் தேர்தல் ஆணையம் எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.  நேற்று முன்தினம் மாலை தஞ்சை பள்ளியக்காரம் பகுதியில் தமாகா வேட்பாளர் நடராஜனை ஆதரித்து பள்ளியக்காரம் ரவுண்டானாவில் இருந்து இரண்டு சக்கரவாகனம் மற்றும் கார்களில் வாக்குகள் சேகரிக்க தொடங்கினர். ஏற்கனவே பள்ளியக்காரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். தமாகாவினர் இவ்வாறு கார்களிலும், இரண்டு சக்கரவாகனங்களிலும் அணிவகுத்து வந்ததால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இரவு நேரங்களில் இரண்டு சக்கரவாகனத்தில் சென்றவர்கள் தங்களது வாகனத்தில் இருந்து சப்தம் எழுப்பிகொண்டே சென்றதால் பள்ளியக்காரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இவ்வாறு தமாகாவினர் தஞ்சை பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED பேரூராட்சி இயக்குனர் ஆய்வு