×

செய்யாறு, போளூர் அருகே வாகன சோதனை உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 1.90 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

செய்யாறு, ஏப்.7: செய்யாறு, போளூர் அருகே அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற 1.90 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
செய்யாறு அடுத்த ராந்தம் செக்போஸ்டில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வி.துரையரசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1 லட்சம் பணம் இருந்தது. விசாரணையில், காரில் வந்தவர் பெங்களூருவை சேர்ந்த ரகுநாதரெட்டி என்பதும், குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று கொண்டிருப்பதும் தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை செய்யாறு தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், ஆர்டிஓவுமான ஆர்.அன்னம்மாளிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், போளூர் அடுத்த வசூர் கூட்ரோடு அருகே நேற்று காலை, தாசில்தார் சுரேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் வந்தவர் 90 ஆயிரம் பணம் வைத்திருந்தார். விசாரணையில், வேனில் வந்தவர் செங்கம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த நெல் வியாபாரி சிலம்பரசன்(34) என்பதும், பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து 90 ஆயிரத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அதனை போளூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Pollur ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி...