×

திருத்தணி-நாகலாபுரம் சாலையில் 2 இடங்களில் காலி குடங்களுடன் மக்கள் மறியல்: சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தல்

திருத்தணி, ஏப். 5: திருத்தணி அருகே அடுத்தடுத்து 2 கிராமங்களில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தில் நாயுடு தெரு, வன்னியர் தெரு, ஆச்சாரி தெரு உள்ளிட்ட பல தெருக்கள் உள்ளன. இங்கு, 350க்கும் மேற்பட்ட வீடுகளில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்காததால் தங்களுடைய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து முறையாக திருத்தணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
 இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு திருத்தணி-நாகலாபுரம் சாலையில் உள்ள வேலஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலை கைவிட்டனர். இதேப்போல், திருத்தணி அடுத்த தாழவேடு காலனியில் மாரியம்மன் கோவில் தெரு, கண்ணபிரான் தெரு, அம்பேத்கார் தெரு ஆகியவை உள்ளன. இந்த தெருக்களில் உள்ள வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திருத்தணி போலீசார் மற்றும் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : places ,Tiruttani-Nagalapuram ,road ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!