×

கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் காட்டுப்பன்றி கடித்து 3 பேர் மருத்துவமனையில் அனுமதி: பயிர்கள் நாசம்விவசாயிகள் கவலை

கும்மிடிப்பூண்டி, ஏப். 5: கும்மிடிப்பூண்டி அருகே, கோட்டக்கரை பகுதியில் காட்டு பன்றி கடித்து 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேர்வாய், ரெட்டம்பேடு, ஆத்துப்பாக்கம், மங்காவரம், மாதர்பாக்கம், பூவலம் பேடு, அய்யலூர், தேவம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோட்டக்கரை அரசு மருத்துவமனை அருகே அப்பகுதியை சேர்ந்த ஸ்வேதா (22), பானு (40), பச்சையப்பன் (60)  ஆகிய 3 பேர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 2 காட்டு பன்றிகள் அவர்களை விரட்டி கடித்தன. இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து 3 பேரையும் மீட்டு கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.

முதலுதவிக்கு பிறகு காயம் அதிகமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய பயிர்களை காட்டு பன்றிகள் நாசம் செய்கின்றன. இவற்றை விரட்ட சென்றால் மனிதர்களை கடித்து குதறுகின்றன. உடனடியாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து காட்டுப்பன்றிகளை பிடித்து சென்று வனப்பகுதிகளில் விட வேண்டும்’’ என்றனர்.

Tags : gorge ,Gummidippondi ,hospital ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...