×

அமைச்சர்களின் பயணங்களுக்கு ஆணையம் கடும் நிபந்தனை

பழநி, ஏப். 5: அமைச்சர்களின் பயணத்திற்கு தேர்தல் ஆணையம் கடும் நிபந்தனைகள் விதித்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதன்காரணமாக அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்து தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர். இதுபோன்ற பிரசார பயணங்களில் ஈடுபடும் அமைச்சர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் நிபந்தனைகள் விதித்து உள்ளது. இதன்படி ஒரு மத்திய அமைச்சர் தவிர்க்க முடியாத பொதுநலன் கருதி தலைமையகத்தை விட்டு பயணம் செல்ல நேரும்போது அந்த பயணத்தின் நோக்கம் குறித்து சம்மந்தப்பட்ட துறை செயலர், அமைச்சர்கள் பயணம் மேற்கொள்ளும் மாநிலத்தின் தலைமை செயலருக்கு பயணத்தின் நடைமுறை குறித்து கடிதம் அனுப்ப வேண்டும். இக்கடித நகலை தேர்தலை ஆணைத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த அமைச்சருக்கு வேண்டிய வாகன வசதி, தங்கும் விடுதி மற்றும் மரியாதை குறித்த விபரங்களை தலைமை செயலர் ஏற்பாடு செய்த தர வேண்டும்.

மாநில அமைச்சர் எவரும் தேர்தல் காலத்தில் எந்த தொகுதியிலும் அலுவல் சார்ந்த பயணம் மேற்கொள்ள முடியாது. ஆனால், ஒரு தொகுதியில் ஏற்படும் சட்டம் மற்றும் ஒழுங்கு, இயற்கை இடர்பாடுகள், அவசரகால தேவைகளை கவனித்து தீர்த்து வைக்க அந்த அமைச்சர் பயணம் அவசியம் என்று இருக்குமானால் விதிவிலக்கு அளிக்கப்படும். ஆனால் இப்பயணத்தின் போது அந்த அமைச்சரின் அரசியல் நடவடிக்கைகள் தேர்தல் பிரசாரத்துடன் இணைக்கக்கூடாது. தலைமை தேர்தல் அலுவலருடன் ஆலோசித்து தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாடுகளை கூர்மையாக கவனிக்கும். அமைச்சரின் தனிப்பயணத்தின்போது எந்த அலுவலரேனும் அவரை சந்திப்பது என்பது பணி விதிகளின்படி தவறான நடத்தையாக கருதப்படும். மத்திய- மாநில அமைச்சர்கள் தங்களின் தனிப்பட்ட பயணத்தின்போது தனது சொந்த அல்லது தனியார் வாகனத்தையே பயன்படுத்த வேண்டும். அமைச்சர்கள் சொந்த பயணத்தின்போது அலுவலக பணியாளர்களை உடன் அழைத்து செல்லக்கூடாது. அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் விருந்தினர் மாளிகையில் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டி உள்ளதால், அமைச்சர்கள், எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்க இயலாது போன்ற நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

Tags : Commission ,ministers ,
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...