×

கரூர் ராணி மங்கம்மாள் சாலையில் மீண்டும் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து கடும் பாதிப்பு

கரூர், ஏப். 5:  ராணி மங்கம்மாள் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூர் ராணி மங்கம்மாள் சாலையில் பாதாள சாக்கடை குழியில் நேற்று திடீர் பள்ளம் விழுந்தது. ஏற்கனவே குறுகிய சாலையாக இருப்பதால் பழைய கோர்ட்டு சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த சாலை முக்கியமான போக்குவரத்து மிகுந்தசாலை. வாங்கல், நெரூர் போன்ற கிராமங்களுக்கும், பசுபதிபாளையம் மற்றும் பிற ஊர்களுக்கும் அனைத்து வாகனங்களும் சென்றுவரும் சாலையாக இருக்கிறது. மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன, பள்ளம் விழுந்த இடத்தின் அருகில் ஏற்கனவே மெகா பள்ளம் ஏற்பட்டு அதனை சரி செய்வதற்கு 6 மாதங்கள் ஆனது. 6 மாதத்திற்கு பின்னர் கடந்த சில மாதங்களாகத்தான் இந்த சாலையில் போக்குவரத்து நடைபெற்றது. அதற்குள் மீண்டும் சாலையில் திடீர் பள்ளம் விழுந்துள்ளது. நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கின் காரணமாகவே இது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது.

 கரூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது. ஒப்பந்த நிறுவனம் இதனை நகராட்சி வசம் ஒப்படைத்து விட்டது. நகராட்சி நிர்வாகம் தான் பராமரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. எனினும் போதுமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத மெத்தன போக்குதான் இந்த சாலையில் அடிக்கடி திடீர் பள்ளம் ஏற்படுவதற்கு காரணம்.  பள்ளம் விழுந்தாலும் அதனை உடனடியாக சரி செய்வதில்லை. மாதக்கணக்கில் ஆக்கி விடுகின்றனர். நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கையும் எடுப்பதில்லை. குறிப்பாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் இருப்பதால் கேள்வி கேட்க உறுப்பினர்கள் இல்லை. அதிகாரிகள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

Tags : reef ,Queen ,Mangalam Road ,Karur ,
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!