×

காங். வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்.8ல் குமரி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

நாகர்கோவில், ஏப்.5: கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகின்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 8ம் தேதி (திங்கள்கிழமை) மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய குமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் வைத்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

மேலும் மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து கட்சி வேட்பாளர்களும் அமோக வெற்றி பெறுவதற்கு தொடர்ந்து தனது பிரசாரத்தின் வாயிலாக லட்சக்கணக்கான வாக்காளர்களை சந்தித்து கருணாநிதி ஆட்சி காலத்தில் செய்த சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் மக்கள் பயனடையக்கூடிய பல்வேறு திட்டங்களையும், மத்திய மாநில அரசின் மக்கள் விரோத போக்கையும் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார்.  அவர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மு.க.ஸ்டாலினின் எழுச்சியுரையை கேட்க திமுக நிர்வாகிகள்,காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,

இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், சமத்துவ மக்கள் கழகம், ஐஜேகே மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் அனைத்து நிர்வாகிகள், விவசாய பெருமக்கள், வியாபார பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க பெருந்திரளாக வரவேண்டும் என  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,DMK ,H. Vasantha Kumar ,visit ,Nagercoil ,Kumari ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...