×

கன்னியாகுமரியில் பா.ஜ வெற்றி மூலம் குமரி மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்

கன்னியாகுமரி, ஏப். 5: கன்னியாகுமரியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் அதிமுக - பா.ஜ கூட்டணி வெற்றி ெபற்றதில்லை என்ற நிலை உள்ளது. இந்த முறை அந்த வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டும் என கூறினார்.
முதல்வர் எடப்பாடி பேசியதாவது:  தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பின் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஏற்கனவே ஜெயலலிதா, நான் மறைந்தாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என கூறினார். அவரது இந்த விருப்பத்தை மனதில் வைத்து நாம் அனைவரும் உழைக்க வேண்டும். அனைத்து தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவோம்.

மீனவர்களுக்காக அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவ சமுதாயத்திற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தி உள்ளனர். எனவே மீனவ தோழர்கள் அதை மனதில் வைத்து நமது கூட்டணி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிக்கு உழைக்க வேண்டும். அதிமுக என்ற அரசியல் இயக்கத்துக்கு ஜாதி, மதம் என எதுவும் கிடையாது.
மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அணிக்கு நாடு முழுவதும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். குமரி மாவட்டத்தில் அதிமுகவினர் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து அனைத்து மக்களையும் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த தேர்தல் மூலம் குமரி மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட செயலாளர்கள் அசோகன், ஜாண்தங்கம், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் கவிஞர் சதாசிவம், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சி.என்.ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், பேரூர் செயலாளர் வின்ஸ்டன், தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீனவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் கூட்டம் முடிந்து முதல்வர் எடப்பாடி  புறப்பட்டு சென்றபின் அதே அரங்கில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி  தளவாய்சுந்தரம் தலைமையில் அதிமுக மீனவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பா.ஜ வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள்  கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மீனவ கிராமங்களில் கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு அதிக வாக்குகள் கிடைக்க வேண்டும். இதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது பேசிய மீனவர்கள், தங்கள் கிராமங்களுக்கு பங்வேறு திட்டங்கள் வேண்டும் என வலியுறுத்தினர். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என பொன். ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

Tags : Kanyakumari district ,stronghold ,Kumari ,AIADMK ,
× RELATED குமரி மாவட்டம் முள்ளூர்துறையில் ரூ.5...