×

வானம்பார்த்த பூமியான தா.பேட்டை ஒன்றியத்தை வளம்மிக்க பகுதியாக மாற்றுவேன் தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் உறுதி

தா.பேட்டை.ஏப்.5:  தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், தா.பேட்டை ஒன்றியத்தை வறட்சி பாதித்த பகுதியாக அரசு அறிவிக்கசெய்து வளமிக்க பகுதியாக மாற்றுவேன் என்று உறுதியளித்தார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தா.பேட்டை அடுத்துள்ள பாப்பாபட்டியில் நேற்று காலை தனது பிரச்சாரத்தை பாரிவேந்தர் துவக்கினார். திருச்சி வடக்கு மாவட்டதிமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பிரசார பயணத்தை துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். அதனைத் தொடர்ந்து பாப்பாபட்டி, சேருகுடி, சூரம்பட்டி, தும்பலம், தா.பேட்டை, காருகு, கரிகாலி, மகாதேவி, ஊரக்கரை, முத்தம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாரிவேந்தர் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்து பேசும்போது, தாபேட்டை ஒன்றியம் வானம் பார்த்த பூமி.  மழையையும், நிலத்தடி நீரையும் நம்பியே இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். அதனால் தாபேட்டை ஒன்றியம் வறட்சி பகுதி என்பதை விவசாயி என்ற முறையில் நான் நன்கு உணர்வேன். எனவே தா பேட்டை ஒன்றியம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தொழில் நுட்ப வல்லுனர்களை ஆலோசித்து வாய்க்கால்களை அமைத்து அதன் மூலம் ஏரி. குளங்களுக்கு தண்ணீர் கொண்டுவர பாடுபடுவேன். ஒன்றியத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க செய்து மத்திய அரசின் மூலம் கூடுதல் நிதி பெற்று தாபேட்டை ஒன்றியத்தை வளர்ச்சி மிக்க பகுதியாக மாற்றி காட்டுவேன்.இப்பகுதியில் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு அமைத்திடவும், மகளிர் தொழில்நுட்ப அரசு கல்லூரி அமைத்திடவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்சாலை அமைத்திடவும் முயற்சி எடுப்பேன். கிராமப்புற இளைஞர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி கிடைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்று பேசினார்.

Tags : Tha Petta ,
× RELATED வானம்பார்த்த பூமியான தா.பேட்டை...