×

காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் காலை 5 மணிக்கு புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும் ரயில் பயன்படுத்துவோர் ஆலோசனை குழு வலியுறுத்தல்

காரைக்கால்,  ஏப்.5:  காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் புதிய விரைவு ரயிலை, காலை 5 மணிக்கு  புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என திருச்சி கோட்ட ரயில் பயன்படுத்துவோர்  ஆலோசனை குழு உறுப்பினர் தனசீலன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, திருச்சி கோட்ட ரயில் பயன்படுத்துவோர் ஆலோசனைக் குழு உறுப்பினர்  தனசீலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர்  உதயக்குமார் ரெட்டியை, நான் மற்றும் திருமலைராயன்பட்டினம் நுகர்வோர்  சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் சிவராஜன், சாய் பிரசாந்த்  ஆகியோர், திருவாரூர் அகல ரயில் பாதை சோதனை ஓட்டம் நடைபெற்றபோது, நேரில்   சந்தித்து ஓர் மனு கொடுத்தோம். அதில், காரைக்கால் - பேரளம் அகல  ரயில்பாதை அமைப்புத் திட்டத்தை மத்திய அரசு அனுமதித்துள்ள நிதியைக் கொண்டு  விரைவாக தொடங்க வேண்டும். காரைக்கால் - கொச்சிவேலி தினசரி விரைவு ரயிலை  நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை,  காரைக்குடி, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, கொல்லம் வழியாக இயக்க  வேண்டும்.

அதேபோல், காரைக்கால் - ராமேசுவரம் வாராந்திர விரைவு  ரயிலை நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், முத்துப்பேட்டை, காரைக்குடி,  மானாமதுரை, ராமநாதபுரம், மண்டபம் வழியாக இயக்க வேண்டும். காரைக்கால் -  திருச்சி பயணிகள் ரயில் எண் 56711-12-ஐ திண்டுக்கல் வரை நீட்டிக்க  வேண்டும். காரைக்கால்-திருச்சி புதிய விரைவு ரயில் காலை 5 மணிக்கு  புறப்படுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். என வலியுறுத்தியுள்ளோம். மேல்  அதிகாரிகளிடம் பேசி பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார் என்றார்.


Tags : Train Trainer Advisory Committee ,Trichy ,Karaikal ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...