×

இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு வழங்கிட கோட்டூரில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் நாகை தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் உறுதி

மன்னார்குடி, ஏப்.4:   இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை வழங்கிட கோட்டூரில் தொழிற்பேட்டை அமைக்க பாடுபடுவேன் என்று நாகை தொகுதி இந்திய கம்யூ.வேட்பாளர் செல்வராஜ்  கூறினார்.நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூ.வேட்பாளர் செல்வராஜ்  வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியம், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் உள்ளிட்ட  கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாகை தொகுதி வேட்பாளர் செல்வராசு பனையூர், கோட்டூர், ஆதிச்சபுரம், மழவராய நல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி,  விக்ரபாண்டியம், சேந்தமங்கலம், இருள்நீக்கி, புழுதிகுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது வேட்பாளர் செல்வராஜ் பேசுகையில்,  மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் நாசமடைந்துள்ளது. நீட் தேர்வால் மருத்துவ மாணவர்களின் கல்வி சிதைந்துள்ளது.

இந்நிலையை போக்கிட மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்றிட, விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திட, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைத்திட, விவசாயிகள் கடன், மாணவர்களின் கல்விக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண, விவசாய தொழிலாளர்கள், படித்த இளைஞர்கள், பெண்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்கிட, அனைத்து பகுதியினருக்கும் தரமான, சமமான கல்வி, மருத்துவ, வசதி கிடைத்திடவும்,  மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அனைத்து வழிகளிலும் அடியோடு தடுத்து நிறுத்திடவும், காவிரி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடவும் தொடர்ந்து போராடுவேன்,  மேலும் கோட்டூரில்  தொழில் வளம் பெருகிடவும், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கிடவும், புதிதாக தொழில்பேட்டை (சிப்காட்) தொடங்கிட நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதிகளில் வசித்து வரும் இளைஞர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான திறன் அறியும் பயிற்சி மையம் (ஸ்கில்டு டிரெயினிங்) இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி  வருகின்றனர். குறைந்த செலவில் அனைவரும் பயன்பெறும் வகையில் அரசே பயிற்சி நிறுவனத்தை தொடங்கிட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Tags : Industrial Estate ,Selvaraj ,
× RELATED பெருகி வரும் மயில்களால் பயிர்கள்...