×

ஆதாரில் திருத்தங்கள் செய்ய முடியவில்லை முடங்கிக்கிடக்கும் இ சேவை மையங்கள்

சேலம், ஏப்.4: ஆதாரில் திருத்தங்கள் சரி செய்ய விண்ணப்பம் செய்து பல மாதங்களானாலும், திருத்தங்கள் சீர் ஆகாததால் பொதுமக்கள் தினசரி ஆதார் மையங்களுக்கு நடந்து வருவதாக புகார் கூறியுள்ளனர்.மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அடையாள அட்டையை எடுத்தது. கடந்த காலங்களில் அனைத்து ஆவணங்கள் பெற ரேஷன்கார்டு பணிகளுக்கும் முக்கிய ஆவணமாக இருந்தது. ஆதார் அட்டை உபயோகித்திற்கு வந்தபின், அனைத்து   ஆவணங்களுக்கும் ஆதார் முக்கிய ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த ஆதார் அட்டையில் ஒரு சிலருக்கு தவறுகள் ஏற்பட்டுள்ளன. இந்த தவறுகளை சரிசெய்ய, பொதுமக்கள் இசேவை, ஆதார் மையங்களுக்கு சென்று, விண்ணப்பம் செய்து சரிசெய்து வருகிறார்கள். ஆனால் சமீப காலமாக தவறுகளை சரிசெய்ய விண்ணப்பிக்கும் பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி ஆகாமல், ஆதார் மையங்களுக்கு நடந்தவண்ணம் உள்ளனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இந்தியாவில் எந்த ஆவணங்கள் பெறவேண்டுமானலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  ஆனால் அந்த ஆதாரில் தவறுகளை சரி செய்ய விண்ணப்பம் செய்தால், தவறுகள் சரி செய்யப்படுவதில் தாமதம் ஆகிறது.விண்ணப்பம் செய்து நான்கு மாதங்கள் ஆனாலும் திருத்தங்கள் சீர் ஆகாமல் அப்படியே இருக்கின்றன. இதை சரி செய்ய பொதுமக்கள் ஆதார் மையங்களுக்கு சென்றால், அங்குள்ள அதிகாரிகள் எங்களுக்கே என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூலாக சொல்கின்றனர்.  கடந்த காலங்களில் ஆதாரில் திருத்தங்கள் சரிசெய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் தனியாரிடம் சென்று திருத்தங்களை சீர் செய்து கொண்டனர். ஆனால் சமீப காலமாக தனியாருக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆதாரில் திருத்தங்கள் சீர் செய்ய இ சேவை, ஆதார் மையங்களை அணுக வேண்டி இருக்கிறது. ஆனால் அங்கு திருத்தங்கள் சரி செய்ய விண்ணப்பம் செய்தாலும், பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படாமல் நாள் கணக்கில் நடந்து வருகின்றனர். இதற்கு அரசு தான் உரிய தீர்வு காணவேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Tags : service centers ,
× RELATED இ-சேவை மையம் மூலம் LLR விண்ணப்பிக்கலாம்:...