×

ஓமலூர் அருகே பட்டா வழங்கக்கோரி 2 கிராம மக்கள் கருப்பு கொடியுடன் போராட்டம்

ஓமலூர், ஏப்.4: ஓமலூர் அருகே இரண்டு கிராம மக்கள் பட்டா வழங்காததால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, இனிவரும் எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கருப்பு கொடியுடன் கிராமத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி, செல்லபிள்ளைகுட்டை பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராமமக்கள் ஒன்றுசேர்ந்து கடந்த வாரம் ஓமலூர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் மக்களின் நிலத்திற்கான பட்டாவை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதிகாரிகள் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதில் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு பேனர்களை வைத்து கையில் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடந்து கருப்பு கொடியுடனும், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேனரை ஏந்தியபடியும் பேரணியாக வந்தனர். அப்போது எங்கள் நிலத்திற்கான பட்டாவை வழங்கும் வரை தேர்தலை புறக்கணிப்போம் என்றும் கோஷமிட்டனர். மேலும், பெண்கள் குழந்தைகள் மூதாட்டிகள் என அனைவரும் கிராமத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது: இரண்டு கிராமங்களிலும் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இந்த கிராமத்தை மேம்படுத்துவதாக 1996-ல்4.38.5 ஹெக்டேர் நிலத்தை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டது. அது, வருவாய் பதிவேடுகளில், கிராம நத்தமாக உள்ளது. குடிசைமாற்று வாரியம் கையகப்படுத்திய பின்னர், மேம்பாட்டு பணியாக வீடுகள் கட்டித்தரவில்லை, தெரு விளக்குகள் அமைக்கவில்லை, சாக்கடைகள் கூட கட்டித்தரவில்லை.

இந்தநிலையில் அரசின் தொகுப்பு வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் எதையும் பெற முடிய வில்லை. மேலும், வருவாய்த்துறையினருக்கு, பட்டா வழங்கக்கூடாது என குடிசைமாற்று வாரியம், அறிவுரை வழங்கியுள்ளது. எனவே, கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் நிலத்திற்கு பட்டா கேட்டு போராடும் நாங்கள், வரும் லோக்சபா தேர்தலையும், இனிவரும் அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்றனர்.  இதுகுறித்து தாசில்தார் குமரன் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தலுக்கு பின், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கு முன்பாக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டாம், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Tags : batta ,Omalur ,
× RELATED 17 வயது சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர்