×

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் சுணக்கம் காட்டும் சுயேச்சைகள்

சிவகங்கை, ஏப்.4: சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் எந்த பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் உள்ளனர். என்ன காரணத்திற்காக போட்டியிடுகின்றனர் என்ற கேள்வி வாக்காளர்களிடம் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏப்.18ல் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 19ல் தொடங்கி, மார்ச் 26ல் முடிவடைந்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்திசிதம்பரம், அமமுக சார்பில் தேர்போகிபாண்டி, பாஜ சார்பில் எச்.ராஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் கவிஞர் சினேகன், நாம் தமிழர் சார்பில் சக்திபிரியா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சரவணன் மற்றும் சுயேச்சைகள் 20 பேர் என 26 பேர் களத்தில் உள்ளனர். முக்கிய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம், தலைவர்கள் பிரச்சாரம், கிராமம், கிராமமாக வேட்பாளர்கள் பிரச்சாரம், வாகன பிரச்சாரம் உள்ளிட்டவை நடந்து வருகிறது. பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களில் சிலர் மட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் இருந்தும் அவர்கள் எந்தவித பிரச்சாரத்திலும் ஈடுபடுவதை காண முடியவில்லை. அனைத்து ஊர்களிலும் வாக்காளர்களிடம் குறைந்த பட்சம் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் பணியில்கூட அவர்கள் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்தது, சின்னம் ஒதுக்கீடு கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் சார்பில் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டங்களில் மட்டும் இவர்களை காண முடிகிறது. வேறு எவ்வித தேர்தல் தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவதில்லை. நேரடியாக சுயேச்சை வேட்பாளர்கள் என்றில்லாமல் ஏதேனும் அமைப்பின் பெயரிலும் இவர்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் சார்ந்த தேர்தலில் மக்களை சந்திக்காமல் வேட்பாளராக போட்டியிடுவதற்கு என்ன காரணம் என வாக்காளர்கள் குழம்பி வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘வேட்பாளராக போட்டியிட்டால் வாக்குச்சாவடிகளில் பூத் ஏஜெண்டாக நம் சார்பில் ஒருவர் இருக்கலாம். எனவே கட்சி வேட்பாளர்களே தங்களுடைய ஆட்களை வாக்குச்சாவடிகளில் இருக்க வைக்க இதுபோல் சுயேச்சை வேட்பாளர்களை நிற்க வைக்கின்றனர்’’ என்றார்.

Tags : Independents ,election campaign ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...